Tuesday, February 28, 2017

Roof Farm-1




''பந்தலிலே பாவக்கா... தொங்குதடி  லோலாக்கா'' என்று ஒரு பெண் பாட...
 ''போகையில பறிச்சுக்கலாம்... போகையில பறிச்சுக்கலாம்'' என்று இன்னொரு பெண் பதில் பாட்டு பாடுகிற கிராமத்து சிலேடை ரொம்பவே பிரபலமானது.
துக்க வீட்டுக்கு வந்த இரண்டு பெண்கள் பாடுவது போல இது அமைந்தாலும், அந்த வீட்டின் புறக்கடை வீட்டுத்தோட்டத்தில் பந்தல் அமைத்து, பாகல் கொடியைப் படர விட்டு இருக்கிறார்கள். பெண்ணின் காதில் தொங்கும் லோலாக்கு போல அதில் பாகல் பிஞ்சுகள் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றன என்பதாக அறிகிறோம்.

1980-களின் இறுதிவரை புறக்கடை இல்லாத வீடுகளை எங்கும் பார்க்கமுடியாது. ஒவ்வொரு வீட்டுப் புறக்கடையிலும் ஒரு சிறிய கிணறும், அதை ஓட்டிய துவைக்கும் கல்லும், சில வாழை மரங்களும், பூச்செடிகளும், அவரை, பாகல் கொடி படரும் சிறிய பந்தலும், கண்டிப்பாக கறிவேப்பிலை செடியும், ஒரமாய் ஒரு குப்பைக்குழியும், அதில் கீறிப் பறித்து மேய்ந்து திரியும் நாட்டுக்கோழிகளையும் காணாமல் இருக்க முடியாது.
காலச்சக்கரம் சுழற்றி அடித்ததில்... மறு முளைப்புத்திறன் கொண்ட நாட்டு ரக விதைகள் அழிந்து போயின. பெருகிய மக்கள் தொகையால், புறக்கடைகளில் புது வீடுகள் உருவாயின. வீட்டுத்தோட்டங்கள் இல்லாமல் போயின. தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிட மக்களும், தினசரி மார்க்கெட்டுகளுக்கு பை தூக்க ஆரம்பித்தனர். கூட்டுக்குடும்பங்கள் வழக்கொழிந்து போய், கோலம் போட வாசலின்றி 'கூட்டில்’ குடும்பமாய் வசித்து வரும் நம்மால், வீட்டுத்தோட்டத்தைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. 2010-ம் ஆண்டு வரை இதுதான் நிலைமை.


வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம்!
ஆனால், ஒவ்வொரு புதுமையும் பழமைக்குத் திரும்பியே ஆகவேண்டும் என்கிற சுழற்சி விதி தன் வேலையைக் காட்ட துவங்கியது. அதன் பலன் அந்தக்காலத்தில் இருந்த புறக்கடைத்தோட்டங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாடித்தோட்டங்களாக பரிணாம வளர்ச்சி பெற்றன. கான்கிரீட் வீடுகளின் மாடியில் தோட்டம் அமைத்து, தங்களது குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளைத் தாங்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்கிற தொழில்நுட்பம் பரவ ஆரம்பித்தது. அதற்காக கருத்தரங்குகள், பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டன. ஊடகங்கள் கட்டுரைகளை வெளியிட்டன.
ரசாயனத்தில் விளையும் காய்கறிகளால் ஏற்படும் தீமைகள் குறித்து அதன் நச்சுத்தன்மை குறித்து நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கர் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் பலரும் விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டனர். அது கிராமங்களைத்தாண்டி நகர்புறங்களில் வசிப்பவர்களையும் வெகுவாக ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

தங்கள் குடும்பத்துக்குத் தேவையான விஷமில்லா காய்கறிகளை நகரவாசிகளும் மாடித்தோட்டத்தில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசும் தன் பங்குக்கு தோட்டக்கலைத் துறை மூலம் நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டத்தை துவக்கியுள்ளது. முதல் கட்டமாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் மாடித்தோட்டம் அமைக்க மானியத்துடன் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள பயனாளிகள் அதைப் பெற்று வீட்டுத்தோட்டங்களை அமைத்து வருகிறார்கள். ஆம், மீண்டும் பழைய காலம் திரும்பிக்கொண்டிருக்கிறது.

2020-ம் ஆண்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தோட்டம் இருக்கும் என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. இனி... வீடுதோறும் விவசாயிகள் இருப்பார்கள். இது காலத்தின் கட்டாயம்.
மாடியிலே பாவக்கா... மதில் சுவத்தில் கோவக்கா..!
'பசுமை விகடன்’ அதை மனதில் கொண்டுதான் கடந்த எட்டு ஆண்டுகளாக வீட்டுத்தோட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகளை வெளியிட்டு வருவதோடு... கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் 'வீட்டுக்குள் விவசாயம்’ என்கிற இந்தப் புதிய பகுதி. வீட்டில் தோட்டம் அமைக்கும் தொழில்நுட்பங்கள், முன்னோடி வீட்டுத் தோட்ட விவசாயிகளின் அனுபவங்கள் ஆகியவை இந்த பகுதியில் இடம் பெறும். 'பந்தலிலே பாவக்கா...’ என்று சிலேடை பாடிய பெண்கள் இனி.... 'மாடியிலே பாவக்கா... மதில் சுவத்தில் கோவக்கா... விஷமில்லா கத்திரிக்கா... விளைஞ்சிருக்கு பாரக்கா’ என்று மாற்றிப் பாடலாம்.

''வீட்டுத்தோட்டம் ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் கிடையாது. அதன் சூட்சமங்களைப் புரிந்து கொண்டால் உங்களுக்குள் இருக்கிற விவசாயி விழித்தெழுவார்'' என்கிறார், பல ஆண்டுகளாக தங்களது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகள், வாழை என விளைவிக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சரஸ்வதி.
முளைப்பாரிதான் மூலாதாரம்!
''கடைக்குப் போனோமா... பணத்தைக் கொடுத்து பை நிறைய காய் வாங்கினோமா... என்ற நிலையில் இருக்கும் பலருக்கு வீட்டுத்தோட்டம் குறித்த ஒரு தயக்கம் நிலவுகிறது. ஆனால், உண்மை அப்படியில்லை... கொஞ்சம் மெனக்கெட்டாலே வீட்டுத்தோட்டம் அமைப்பது ரொம்ப சுலபம். கோயில் திருவிழாக்களில் பெண்கள் பலரும் முளைப்பாரி எடுக்கிறார்கள். திருவிழா தொடங்கும் ஒரு மாதத்துக்கு முன் இருந்தே அதற்கான வேலையை வீடுகளில் தொடங்கி விடுவார்கள். நல்ல செம்மண் அல்லது வளமான வண்டல் மண்ணை நிலத்தில் இருந்து தோண்டி எடுத்து வந்து, அதில் உள்ள கட்டிகளை உடைத்து, சிறுகற்களை அப்புறப்படுத்தி அந்த பொலபொலப்பான மண்ணில் சிறிது ஆட்டு எரு அல்லது சாணம் கலந்து பாத்திரத்தில் பாதியளவு கொட்டி சமன்படுத்துவார்கள். தொடர்ந்து முளைப்பாரிக்குத் தேவையான நெல், கம்பு, சிறுசோளம், வரகு, கேழ்வரகு என்று ஏதாவது ஒரு சிறுதானிய விதைகளைத் தூவி அதை கிளறி விட்டு, மண் நனையும்படி தண்ணீர் ஊற்றி வெயில்படும்படி முற்றத்தில வைப்பார்கள். தொடர்ந்து தேவையான தண்ணீரைக் கொடுத்து வர 20 நாட்களில் பாத்திரத்தில் உள்ள விதைகள் முளைத்து 'திகுதிகு’ என்று வளர்ந்து பச்சைப்பசேல் என்று கண்ணைக் கவரும். அதைப் பெருமையோடு ஊர்வலமாய் எடுத்துச் சென்று சாமிக்குப் படைத்துத் திரும்புகிறார்கள். ஆக, பெண்கள்தானே முளைப்பாரியை விதைக்கிறார்கள், விளைவிக்கிறார்கள். ஆம், அந்தத் தொழில்நுட்பம்தான் வீட்டுத்தோட்டத்துக்கு மூலாதாரம்'' என்று வீட்டுத்தோட்ட லாவகம் குறித்து எளிமை விளக்கம் அளித்த சரஸ்வதி தொடர்ந்தார்.


 ''வீட்டுத்தோட்டம் அமைக்க, குறைந்தபட்சம் 50 சதுர அடி இடம் இருந்தாலே போதுமானது. நல்ல வெயில்படும் இடமாகவும் இருக்க வேண்டும். இதற்குத் தேவையான உபகரணங்களை இரண்டு விதங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஒன்று 'ரெடிமேட் கிட்ஸ்’. இதற்கு செலவு அதிகம். தேடல் குறைவு. அடுத்தது, வீணான பழைய பொருட்களில் செடிகள் வளர்ப்பது. இதற்கு தேடல் அதிகம். செலவு குறைவு. நாங்கள் வீணான பொருட்களைக் கொண்டுதான் வளர்க்கிறோம். அவற்றைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்'

(Thanks Vikatan)

No comments:

Post a Comment