Tuesday, February 28, 2017

Roof Farm-4


வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பாக சமீப நாட்களாக ஏற்பட்டு வரும் விழிப்பு உணர்வைத் தொடர்ந்து தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, மொட்டைமாடியில் காய்கறி உற்பத்தி செய்யும் வகையில் ’நீங்களே செய்து பாருங்கள்’ என்ற நகர்ப்புற காய்கறி அபிவிருத்தித் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் மானிய விலையில் வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான பைகள், விதைகள், சிறு கருவிகள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவற்றை வழங்குவதுடன், தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
இத்திட்டம் குறித்து இங்கு விளக்குகிறார், கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் தோட்டக்கலை துணை இயக்குநர்  ஏ.ராமகிருஷ்ணன். “நமது உணவில் காய்கறிகள் தவறாமல் இடம் பெறவேண்டும். 85 கிராம் பழங்களும், 300 கிராம் அளவிலான காய்கறிகளையும் வயது வந்தோர் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் சரிவிகித உணவு என்கிறார்கள் உணவியல் வல்லுநர்கள். ஆனால், பெரும்பாலும் நாள் ஒன்றுக்கு 130 கிராம் அளவுக்குத்தான் நாம் எடுத்துக் கொள்கிறோம் என்கின்றன, புள்ளிவிவரங்கள். பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களின் விலையேற்றம் காரணமாக உற்பத்திச்செலவு அதிகரித்து, காய்கறிகளின் விலை உயர்ந்து விடுவதால், தினந்தோறும் காய்கறிகளை உணவில் சேர்க்கமுடியாத நிலையில் பலர் இருக்கிறார்கள்.
ஆனால், விலைவாசியைப் பற்றி கவலைப்படாமல், நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே நமது வீட்டில் உற்பத்தி செய்து கொள்ளும்விதமாக நகர்புற காய்கறி அபிவிருத்தித் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது, தமிழ்நாடு அரசு. மானியத்துடன் கூடிய இந்தத் திட்டம் தற்போது சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளி களுக்கு தேங்காய் நார்கழிவுக் கட்டி (காயர் பித்) 2 கிலோ, 11 இஞ்சுக்கு 11 இஞ்ச் அளவுள்ள பாலித்தீன் பைகள், கத்திரி, தக்காளி, மிளகாய் விதைகள் தலா 5 கிராம், வெண்டை, கொத்தவரை, செடி அவரை, முள்ளங்கி விதைகள் தலா 20 கிராம் மற்றும் கீரைகள், கொத்தமல்லி விதைகள் தலா 200 கிராம் எனக் கொடுக்கிறோம்.
இடுபொருட்கள் ஐந்து சாதனங்கள் ஐந்து!
அதோடு, நாற்று உற்பத்தி செய்வதற்கு வசதியாக 50 குழிகளைக் கொண்ட ஒரு குழித்தட்டு, 5 லிட்டர் பூவாளி, கைத்தெளிப்பான், மண் கிளறும் முள்கொத்து, மண் அள்ளும் கரண்டி ஆகியவற்றையும் கொடுக்கிறோம். பயிர் வளர்ச்சிக்காக ஒரு கிலோ உரம், பூச்சித்தாக்குதல் இருந்தால், சமாளிக்க 100 மில்லி வேம்புப் பூச்சிவிரட்டி பாக்கெட், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா தலா 200 கிராம், சூடோமோனாஸ் 50 கிராம், டிரைகோடெர்மா விரிடி 50 கிராம் ஆகியவற்றையும் கொடுக்கிறோம். இவற்றுக்காக 50 சதவிகிதம் மானியம் போக பயனாளிகள் 1,375 ரூபாய் செலுத்த வேண்டும் (இது 2013-14-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தொகை). இதோடு, வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பான தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய கையேடு ஒன்றையும் அளிக்கிறோம்.

நடைமுறைபடுத்தும் போது, ஏற்படும் சந்தேகங்களுக்கு எங்கள் அலுவலர்கள் விளக்கம் அளிப்பார்கள்”  என்ற ராமகிருஷ்ணன், நிறைவாக, “வீட்டு மாடியில் அல்லது வீட்டைச் சுற்றி காலி இடம் இருக்கும் மாநகராட்சி எல்லைக்குள் குடியிருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம். திட்டத்தில் இணைய விரும்புபவர்கள், தோட்டக்கலை அலுவலகத்தில் குடும்ப அட்டை நகல், முகவரிச் சான்று... போன்ற  இருப்பிட ஆதாரத்தைக் கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். வாடகை வீட்டில் வசிப்பவர்களும் கூட, இந்தத் திட்டத்தின் மூலம் மாடித்தோட்டம் அமைத்து மானியம் பெற முடியும். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகளைத் தேர்வு செய்கிறோம்.
2013-14-ம் ஆண்டில் 2 ஆயிரத்து 350 நபர்களுக்கு வழங்கியிருக்கிறோம். தொடர்ந்து பதிவு நடந்து வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வீட்டுத்தோட்டம் அமைப்பதால் வீடுகளின் வெப்பநிலை 6 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைகிறது. மாசுபடுதல் கட்டுப்படுத்தப்படுகிறது. மாடியில் தோட்டம் அமைக்கும்போது, செடிகளில் பூச்சி-நோய்களின் தாக்குதலும் வெகுவாக குறைகிறது. ஆக்சிஜன் அதிகளவு உற்பத்தியாகிறது. அத்துடன் நமக்கும் புத்துணர்வு கிடைக்கிறது” என்றார்.
குழித்தட்டு முறையில் நாற்று உற்பத்தி!
குறைந்த இடத்தில் அதிக நாற்றுகளை உற்பத்தி செய்ய குழித்தட்டு உதவுகிறது. 50 குழிகளைக் கொண்ட இதில் ஒவ்வொரு குழியும் 2 முதல் 3 அங்குலம் அளவில் இருக்கும். இதில் அதிக நீர் வெளியேற துளைகள் இருக்கின்றன. இந்தக் குழிகளுக்குள் தேங்காய்நார்க் கழிவுகளை இட்டு நிரப்பி, ஒரு விதையை அதில் நட வேண்டும். பிறகு, நுண்ணுயிர்கள் அடங்கிய கலவையை தென்னைநார்க் கழிவில் சேர்த்து கலந்து, குழியை மூட வேண்டும். பூவாளி மூலமாக லேசாக தண்ணீர் தெளித்து விதைகள் முளைத்து வரும் வரை, பாலித்தீன் கொண்டு மூடாக்கு போல மூடி வைக்க வேண்டும். முளைத்ததும் பாலித்தீனை அப்புறப்படுத்தி விட்டு, வெயில் படுமாறு வைக்க வேண்டும். அதிக, வெயில் நேரங்களில் நிழலில் வைத்துக் கொள்ளலாம். 30 நாட்களுக்கு மேல், தேவையைப் பொறுத்து நாற்றைப் பறித்து, தொட்டிகளிலோ, பைகளிலோ நடவு செய்யலாம்.
காய்கறிக் கழிவில் உரம்!
வீட்டில் வீணாகும் காய்கறிக் கழிவுகளையே உரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 கிலோ காய்கறிக் கழிவில், 500 கிராம் நாட்டுச் சர்க்கரையைக் கலந்து ஒரு பீப்பாயில் போட்டு ஒருவாரம் வைத்திருந்தால் இரண்டும் கலந்து திரவமாக மாறிவிடும். இத்திரவத்தை செடிகளுக்கு ஊற்றினால், செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். இதை அதிகமாக விட்டாலும் பாதிப்பு வராது.
-
தொடர்புக்கு,
வேளாண் தோட்டக்கலைத்துறை அலுவலகம்,
கோயம்புத்தூர்.
0422-2453578

(Thanks Vikatan) 

No comments:

Post a Comment