Tuesday, February 28, 2017

முருங்கைதிருமணம், கோவில் விழாக்கள், வீட்டு விசேஷங்கள்... என எந்த விழாவாக இருந்தாலும் சமையலுக்கான காய்கறிப் பட்டியலில் கட்டாயம் இடம்பெறும் காய்கறிகளில் முருங்கைக்காயும் ஒன்று. அந்தளவுக்குத் தேவை இருப்பதால், பல விவசாயிகள் முருங்கைச் சாகுபடியில் ஈடுபட்டு நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு.

பாப்பிரெட்டிப்பட்டிக்கு அடுத்துள்ள மோளையானூர் கிராமத்தில்தான் சாமிக்கண்ணுவின் முருங்கைத்தோப்பு உள்ளது. சேர்வராயன் மலையிலிருந்து குளிர்காற்று வீசிக் கொண்டிருந்த ஒரு இதமான சூழ்நிலையில் அவரது தோட்டத்துக்குச் சென்றோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

“எனக்குப் பூர்விகம் இந்த ஊருதான். தபால்துறையில பகுதிநேர ஊழியரா இருக்கேன். எங்கப்பா காலத்துல சாமை, தினைனு மானாவாரி பயிர்கள் அதிகம் பயிர் செஞ்சோம். அதுக்குப் பிறகு நெல், கரும்பு, மஞ்சள், மரவள்ளி, காய்கறிகள்னு பயிர் பண்ண ஆரம்பிச்சோம். நண்பர்களோட தொடர்புகளால கே.வி.கே., வேளாண் பல்கலைக்கழகம் நடத்துற பயிற்சிகள்ல கலந்துக்குற வாய்ப்புகள் கிடைச்சது. பயிற்சிகள்ல கத்துக்கிறதோட, வேளாண் விஞ்ஞானிகள்கிட்டயும் அப்பப்போ கலந்துரையாடுவேன். அப்படிக் கிடைத்த பயிற்சிகள், வேளாண் விஞ்ஞானிகள் தொடர்பாலதான் இன்னிக்கு நான் முருங்கை சாகுபடியில முன்னணியில இருக்கேன்.

அப்படி ஒரு பயிற்சியிலதான் துல்லியப் பண்ணை முறையைத் தெரிஞ்சுகிட்டு, 2003-ம் வருஷம் துல்லியப் பண்ணை முறையில தக்காளியையும், மரவள்ளியையும் பயிர் செஞ்சேன். அப்போ, 1 ஏக்கர்ல 58 ஆயிரம் கிலோ தக்காளி மகசூல் எடுத்தேன். வழக்கமாக ஒரு ஏக்கர்ல 10 ஆயிரம் கிலோ வரைதான் மகசூல் கிடைக்கும். துல்லியப் பண்ணை முறையில தெரிஞ்சுகிட்ட விஷயங்களை சரியா கடைப்பிடிச்சதாலதான் அதிக நாட்கள் காய் காய்ச்சு கூடுதல் மகசூல் கிடைச்சது. அதே முறையைத்தான் முருங்கைக்கும் பயன்படுத்திட்டிருக்கேன்” என்ற சாமிக்கண்ணு, நெல் வயலில் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரை மடை மாற்றிவிட்டு வந்து தொடர்ந்தார்.

“முருங்கைச் சாகுபடி யோசனையும் கே.வி.கே மூலமாதான் கிடைச்சது. அவங்க பரிந்துரை செஞ்ச பி.கே.எம்-1 செடிமுருங்கை  ரகத்தைத்தான் ஆரம்பத்துல போட்டேன். ‘இந்த ரகத்துல 3 வருஷம் வரை மகசூல் எடுக்கலாம். நல்ல லாபம் கிடைக்கும்’னு விஞ்ஞானிகள் சொன்னாங்க. ஆனா நான், 6 வருஷம் வரை மகசூல் எடுத்தேன். அடுத்து ஏற்றுமதிக்கான வாய்ப்பு உள்ள பெரிய திரட்சியான காய் கிடைக்கிற ரகம் குறித்துத் தேட ஆரம்பிச்சேன். அப்போ, திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டி அழகர்சாமி உருவாக்குன பி.ஏ.வி.எம் மரமுருங்கை  ரகத்தைப் பரிந்துரை பண்ணாங்க. அதையும் சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்.

மொத்தம் 5 ஏக்கர் நிலம் இருக்கு. செம்மண் கலந்த சரளை மண். வாணியாறு நீர்த்தேக்கத்துல இருந்து வர்ற தண்ணிதான் நீர் ஆதாரம். 1 ஏக்கர் நிலத்துல நெல், 1 ஏக்கர் நிலத்துல பி.ஏ.வி.எம் ரக முருங்கை, 1 ஏக்கர் நிலத்துல பி.கே.எம்-1 ரக முருங்கை இருக்கு. மீதி நிலத்தை உழவு ஓட்டி வெச்சிருக்கேன். அதோட பாலுக்காக 2 மாடுகள் வெச்சிருக்கேன். பி.ஏ.வி.எம் ரகத்துல அஞ்சாவது வருஷமா மகசூல் எடுத்திட்டிருக்கேன். இது மர முருங்கை ரகம். சொட்டுநீர்ப் பாசன முறையிலதான் தண்ணீர் பாய்ச்சுறேன். பொதுவா ஏப்ரல் மாசத்துல இருந்து ஆகஸ்டு மாசம் வரைக்கும்தான் முருங்கை அறுவடை இருக்கும். ஆனா, நான் செப்டம்பர் மாசம் முடியுற இந்த நேரத்துலயும் காய் கிடைக்கிது. காய் முடிஞ்சதும் கவாத்து பண்ணி இடுபொருட்களைக் கொடுத்துடுவேன்.

பி.கே.எம்-1 ரக முருங்கை இப்போ காய்ப்பு முடியுற தறுவாய்ல இருக்கு. அந்தக் காய்களை லோக்கல் மார்கெட்லதான் விற்பனை செய்ய முடியுது. ஆனா, பி.ஏ.வி.எம் ரக முருங்கை ஏற்றுமதித் தரத்துல இருக்குறதால விற்பனை வாய்ப்பு அதிகமா இருக்கு. காய் நல்ல நிறத்தோட, தரமா, திரட்சியா இருக்குறதால நல்ல விலையும் கிடைக்கிது. தோட்டத்துக்கே வந்து காய் வாங்கிக்கிறாங்க. தரமான பொருளை உற்பத்தி செஞ்சா கிராக்கி அதிகமா இருக்குங்கிறதை நான் நேரடியா உணர்ந்திருக்கேன்” என்ற சாமிக்கண்ணு நிறைவாக வருமானம் குறித்துச் சொன்னார்.
“ஏப்ரல் மாசத்துல இருந்து செப்டம்பர் மாசம் வரை முருங்கைக்காய் காய்க்கும். ஜூன், ஜூலை மாசங்கள்ல வரத்து அதிகமா இருக்கிறதால விலை குறைஞ்சிடும். ஆகஸ்ட் மாசத்துக்கு மேல விலை உயர ஆரம்பிக்கும். செப்டம்பர் மாசத்துக்கு மேல காய் கிடைச்சா நல்ல விலை கிடைக்கும்.
1 ஏக்கர் நிலத்துல போட்டிருக்கிற பி.ஏ.வி.எம் ரகத்துல 6 வருஷமா மகசூல் கிடைச்சிட்டிருக்கு. வழக்கமா ஒரு ஏக்கர்ல 10 டன் முதல் 12 டன் வரைதான் முருங்கைக்காய் கிடைக்கும். நான் அதிகபட்சமா வருஷத்துக்கு 18 டன் எடுத்திருக்கேன். பொதுவா 15 டன்னுக்கு மேலதான் மகசூல் கிடைக்கிது.

இந்த முறை 16 ஆயிரத்து 800 கிலோ (16.8 டன்) மகசூல் கிடைச்சிருக்கு. பொதுவா ஒரு கிலோ 8 ரூபாய்ல இருந்து 35 ரூபாய் வரை விற்பனையாகும். சில நாட்கள்ல மட்டும் அதிக விலை கிடைக்கும். நான் அதிகபட்சமா கிலோ 80 ரூபாய்னு கொடுத்திருக்கேன். 16 ஆயிரத்து 800 கிலோ காய் விற்பனை செய்தது மூலமா 4 லட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதுல ஒன்றரை லட்ச ரூபாய் செலவு போக, 3 லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய் லாபம். வருஷத்துக்கு வருஷம் காய்ப்பு மாறுங்கிறதால வருமானமும் கூடிக் குறையும். எப்படிப்பார்த்தாலும் ஏக்கருக்கு 3 லட்ச ரூபாய் கண்டிப்பா லாபம் கிடைச்சுடும்” என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, சாமிக்கண்ணு, செல்போன்: 97883 18950.

செடிமுருங்கை நாற்று உற்பத்தி! 

“பிகேஎம்-1 செடிமுருங்கை விதை வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள்ல கிடைக்கும். அத  வாங்கி நாத்தாக உற்பத்தி செய்துதான் நடவு செய்றேன். 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 250 கிராம் எரு, 2 கிராம் சூடோமோனஸோடு 500 கிராம் வளமான மண்ணைக் கலந்து பாலித்தீன் பையில் இட்டு  முருங்கை விதையை ஊன்ற வேண்டும். தினமும் காலை, மாலை வேளைகளில் தண்ணீர் தெளித்து வந்தால், 7-ம் நாளுக்கு மேல் முளைத்து வரும். 40-ம் நாளுக்கு மேல் நடவு செய்யலாம்”.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ஒரு ஏக்கர் நிலத்தில் முருங்கை சாகுபடி குறித்து சாமிக்கண்ணு சொன்ன தகவல்கள் இங்கே...

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 5 கலப்பை கொண்டு 2 சால் உழவு செய்ய வேண்டும். அடுத்து கொக்கிக் கலப்பை கொண்டு 1 சால் உழவு செய்ய வேண்டும். அடுத்து 10 டன் எருவைக் கொட்டிக் கலைத்து... ரோட்டவேட்டர் மூலம் உழுது வரிசைக்கு வரிசை 10 அடி, செடிக்குச்செடி 8 அடி என்ற இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 500 குழிகளுக்கு மேல் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் தலா 20 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு, 5 கிராம் சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து இட்டு நாற்றுக்களை நடவு செய்ய வேண்டும். பிறகு சொட்டுநீர்க் குழாய்களைப் பதித்து, வாரம் ஒருமுறை தண்ணீர்விட்டு வர வேண்டும்.

நடவு செய்த 5, 10 மற்றும் 15-ம் நாட்களில் நீரில் கரையும் உரத்தை பாசன நீருடன் கரைத்துவிட வேண்டும். தலா 150 மில்லி ட்ரைக்கோடெர்மா விரிடி, பாஸ்போ பாக்டீரியா, அசோஸ் ஸ்பைரில்லம், வேம் ஆகியவற்றைக் கலந்து வாரம் ஒருமுறை பாசனநீருடன் கொடுக்க வேண்டும். மூன்று மாதங்கள் இப்படிக் கொடுத்துவிட்டு அதன் பிறகு மாதம் ஒருமுறை கொடுத்து வர வேண்டும்.


15-ம் நாளில் ஜிங்க் சத்தை அதிகரிக்கத் தேவையான உரத்தை 1 செடிக்கு 10 கிராம் என்ற அளவில் இட வேண்டும். தொடர்ந்து தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து அடங்கிய நீரில் கரையும் உரத்தை பாசன நீரில் கரைத்து கலந்துவிட வேண்டும். செடிகள் ஒரு அடி உயரம் வளர்ந்த பிறகு, நுனியைக் கிள்ளிவிட்டு, 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் சூடோமோனஸ் என்ற அளவில் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். இது, பூஞ்சணத்தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.

செடிகளில் பூவெடுக்கும் நேரத்தில் 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் நுண்ணூட்டக் கலவை என்ற விகிதத்தில் கலந்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும். இதே கரைசலை காய்க்கும் பருவத்தில் 15 இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.

அவ்வப்போது உயிர் பூச்சிவிரட்டியை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளித்து வந்தால் பூச்சிகள் கட்டுப்படும். அவ்வப்போது மண்ணில் உள்ள சத்துக்களைச் சரிபார்த்து... தேவைப்படின் போரான், மெக்னீசியம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களைக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை அறுவடை முடிந்த பிறகும், ஏக்கருக்கு 10 டன் தொழுவுரத்தை இட்டு ரோட்டவேட்டர் மூலம் உழ வேண்டும். முதல் ஆண்டில் மகசூல் குறைவாகத்தான் இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளில் மகசூல் அதிகரிக்கும்.

பிசின்... கவனம்!

“மரங்களைக் கவாத்து செய்யும் சமயங்கள்ல வெட்டிய இடங்கள்ல உடனடியாக... 1 லிட்டர் தண்ணிக்கு 10 கிராம் சூடோமோனஸ் கலந்து தெளிச்சி விடணும். இல்லைன்னா, பிசின் உருவாகி மரம் சேதமாகிவிடும்”.

நான் கற்ற பாடம்!


“ஆரம்பத்துல ரசாயன உரங்களைத்தான் அதிகம் பயன்படுத்தினேன். அதுல படிப்படியா மகசூல் குறைய ஆரம்பிச்சது. அப்பறம், ஜிப்சம், அசோஸ் ஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா, தொழுவுரம் எல்லாத்தையும் ரசாயன உரங்களோட சேர்த்துப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். அதுல மகசூல் அதிகரிக்க ஆரம்பிச்சது.இப்போ இயற்கை இடுபொருட்களைத்தான் அதிகமா கொடுத்திட்டு இருக்கேன். அதனால நல்ல விளைச்சல் கிடைச்சிட்டிருக்கு. முன்னாடி பஞ்சகவ்யாவை நானே தயாரிச்சேன். ஆனா, இப்போ நேரம் இல்லாததால உயிர் உரங்களை மட்டும் பயன்படுத்திட்டிருக்கேன். ஆக, முக்கால் பங்கு இயற்கை, கால் பங்கு செயற்கைன்னு விவசாயம் செய்றேன். கூடிய சீக்கிரமே முழு இயற்கை விவசாயத்துக்கு மாறிடுவேன்” என்கிறார், சாமிக்கண்ணு.

ஜூன் மாசம் ஏற்ற பருவம்!

“முருங்கைக்கு ஜூன் பட்டம் ஏற்றது. அடுத்து அக்டோபர்-நவம்பர் பட்டத்தில் நடவு செய்யலாம். நாமே நாற்று உற்பத்தி செய்வது நல்லது. செம்மண், செம்மண் சரளை நிலங்களில் செழிப்பாக வளரும்”.

கைகொடுக்கும் சொட்டுநீர்ப் பாசனம்!

“சொட்டுநீர்ப் பாசனம் செய்யும்போது தண்ணீர் நிறையவே மிச்சமாகுது. ஒரு ஏக்கர் முருங்கைத் தோட்டத்துக்கு 2 மணி நேரம் தண்ணீர் பாய்ச்சினால் போதும். ஒருமுறை பாசனம் பண்ணும்போது சராசரியா 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர்தான் செலவாகுது” என்கிறார், சாமிக்கண்ணு.

விதை, இலையிலும் வருமானம்!

“காய்க்கு விலை குறைவாகக் கிடைக்கும் சமயங்கள்ல பறிக்காம மரத்திலேயே முற்றவிட்டு விதை எடுக்கலாம். அதைக் காயவைத்து பத்திரப்படுத்தி விற்பனை செய்ய முடியும். எண்ணெய் உட்படப் பல தேவைகளுக்காக முருங்கை விதைகளை வாங்குறாங்க. ஒரு கிலோ விதை 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரை விற்பனையாகுது. அதேபோல, கவாத்துச் செய்யும்போது கிடைக்கும் இலைகளையும் காய வைத்து விற்பனை செய்ய முடியும். பி.கே.எம்-1 ரகத்துல அதிக இலைகள் கிடைக்கும். பி.ஏ.வி.எம் ரகத்தில் இலை குறைவாகத்தான் கிடைக்கும்” என்கிறார் சாமிக்கண்ணு.

(by Pasumai Vikatan)


No comments:

Post a Comment