Tuesday, March 7, 2017

Roof Farm-END

சென்னை, முகப்பேர் பகுதியில் உள்ள ஸ்பார்டன் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அமைக்கப்பட்டுள்ள தோட்டம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. நம்மையும் அது ஈர்க்க, சோலை போன்றிருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தார், வீட்டின் உரிமையாளர், ஜஸ்வந்த் சிங்.

“பூர்வீகம், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர். 1937-ம் ஆண்டில் என்னுடைய தாத்தா காலத்திலேயே சென்னையில் குடியேறி விட்டோம். அப்போதிருந்து இப்போது வரை கட்டுமானத் தொழிலைத்தான் பரம்பரையாகப் பின்பற்றி வருகிறோம்.

1978-ம் ஆண்டில் இருந்து இந்த வீட்டில் நாங்கள் வசித்து வருகிறோம். முப்பது ஆண்டுகளுக்கு முன் துளசிச் செடியுடன் ஆரம்பித்த எங்கள் தோட்டம்... இன்று, கீரைகள், காய்கறிகள், மரங்கள், பூ வகைகள் என வனம்போல் காட்சியளிக்கிறது. ஐந்தாயிரம் சதுர அடியில்... அறுபதுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள்; இருபதுக்கும் மேற்பட்ட பூச்செடிகள் மற்றும் காய்கறிச் செடிகள்; நாற்பதுக்கும் மேற்பட்ட பழச்செடிகள்; ராசி நட்சத்திர செடிகள்; தென்னை, வில்வம், ருத்ராட்சம், சந்தனம் போன்ற மரங்கள் இங்குள்ளன.

வசம்பு, ஆடாதொடை, நிலவாகை, சித்தரத்தை, கோபுரம்தாங்கி, நேத்திர மூலி, பூனை மீசை,  பிரண்டை, திப்பிலி, வெட்டிவேர், சிறியாநங்கை, வல்லாரை, நொச்சி, கற்றாழை... போன்ற  மூலிகைகளை சிறிய தொட்டிகளில் வளர்த்து வருகிறேன். சந்தன மரங்களுக்கு கீழே, சிறிய பானைகளில் துளையிட்டு வைத்து,  சிட்டுக்குருவிகளுக்கும், சிறிய பறவைகளுக்கும் இடம் அமைத்துளேன்” என்ற ஜஸ்வந்த் சிங் ஒவ்வொரு வகை தாவரமாகச் சுற்றிக் காட்டினார்.

“காய்கறிகள் மாடியில் உள்ளன. தக்காளி, வெண்டை, பீன்ஸ், ஐந்து வகை கத்திரி, முருங்கை, பாகற்காய், முட்டைகோஸ், காலிஃப்ளவர், அவரை, குட மிளகாய்,  நான்கு வகை பச்சை மிளகாய்... என காய்கறி வகைகள் உள்ளன. இவற்றை வீட்டுத்தேவைக்குப் பயன்படுத்துகிறேன். பின்புறமுள்ள மாடியில், மூன்று வகையான எலுமிச்சை ரகங்கள், நெல்லி, மாம்பழம், நான்கு வகையான ஆப்பிள் ரகங்கள், சப்போட்டா, பலாப்பழம், ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி, பேரீச்சை, அத்தி, அன்னாசி, ஆரஞ்சு, சீமைப்பலா, கொய்யா போன்ற பழ மரங்கள் உள்ளன. பழ மரங்களில் மூன்று தேனீப் பெட்டிகள் உள்ளன. வீட்டின் மாடியில் சோலார் பேனல்கள் அமைத்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறோம்” என்று வரிசையாக அடுக்கிய ஜஸ்வந்த் சிங் நிறைவாக,

காய்கறிகள்... பழங்கள்... மூலிகைகள்... மாடியில் செழிக்கும் இயற்கைத் தோட்டம்!
“இங்கு விளையும் பழங்கள், காய்கறிகள், பூக்கள் அனைத்தையும் எங்கள் தேவை போக நண்பர்கள், உறவினர்களுக்குக் கொடுக்கிறோம். நஞ்சில்லா உணவை நாங்கள் உண்பதோடு நண்பர்களுக்கும் கொடுப்பதில் நாங்கள் சந்தோஷமடைகிறோம். நாங்கள் காய்கறிகளை வெளியில் வாங்குவதேயில்லை. இதனால் பணமும் மிச்சமாகிறது. அதை விட சுவையான பழங்கள், காய்கறிகளை சாப்பிடுவது எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது” என்றார்.

வீட்டுத்தோட்டத்துக்கு விருது!

கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சென்னையின் சிறந்த வீட்டுத்தோட்டத்துக்கான தமிழக அரசின் விருது ஜஸ்வந்த் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளது

ஊட்டம் கொடுக்கும் பஞ்சகவ்யா!
செடிகளுக்குப் பயன்படுத்தும் இடுபொருட்கள் மற்றும் பூச்சிவிரட்டிகள் குறித்துப் பேசிய ஜஸ்வந்த் சிங், “நோய் மற்றும் பூச்சிகளால் செடிகள் தாக்கப்பட்டால்... வேப்பிலை, வேப்பங்கொட்டை, ஆடாதொடை இலை, நொச்சி இலை, துளசி இலை, தும்பை இலை ஆகியவற்றை இடித்து, அவற்றை மாட்டுச் சிறுநீரில் ஊற வைத்து தெளிப்பேன். இக்கரைசலை 15 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கிறேன். ஒவ்வொரு செடிக்கும் 5 நாட்களுக்கு ஒரு முறை பஞ்சகவ்யா கொடுத்து விடுவேன். தவிர மாட்டு எருவையும் அவ்வப்போது கொடுப்பேன். இவற்றிலேயே செடிகள் செழித்து வளர்கின்றன. வீட்டுக்கு இயற்கை எரிவாயுக் கொள்கலன் அமைத்துள்ளேன். அதில் கிடைக்கும் கழிவையும் இயற்கை உரமாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். தன் தோட்டத்துக்கான உரத்தை, தானே தயார் செய்துகொள்வதுதான் சிறந்ததாக இருக்கும்” என்றார். 

END

(Thanks Vikatan)

Roof Farm-18

சென்னை, முகப்பேரில் வசிக்கும் கலிங்கராணி, மாடித்தோட்டம் அமைத்து மூலிகைகளையும், காய்கறிகளையும் விளைவித்து வருகிறார்.

கலிங்கராணி சொல்வதைக் கேட்போமா...
“நான் அரசு மருத்துவமனையில 25 வருஷமா நர்ஸா வேலை பார்த்துட்டு விருப்ப ஓய்வு வாங்கிட்டு வீட்டுல இருக்கேன். எட்டு வருஷமா இந்தச் செடிகள்தான் எனக்கு மன நிம்மதியைத் தந்துக்கிட்டு இருக்கு. பொதுவாவே எனக்கு தோட்டம்னா சந்தோஷமா இருக்கும். ஆரம்பத்துல தக்காளி, கத்திரிக்காய்னுதான் நட ஆரம்பிச்சோம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமா, முடக்கத்தான், பொன்னாங்கன்னி, ஓமவல்லி, கற்றாழை, பப்பாளி, சப்போட்டா, பூக்கள், மூலிகைகள்னு வளர்க்க ஆரம்பிச்சிட்டோம். ஒரு தாமரைக்குளம் அமைச்சு அதுல மீன்கள் விட்டிருக்கோம். முன்னெல்லாம் தினமும் அரை மணி நேரம்தான் செடிகளைப் பராமரிப்பேன். இப்போ, முழுநேரமும் செடிகள்தான் எனக்கு. என்னோட குழந்தையை வளர்த்தெடுக்கிற மாதிரி சந்தோஷமா இருக்கு. செடிகளைப் பார்த்தாலே மனசுல இருக்கிற கவலையெல்லாம் பறந்துடும்.
சுவர்த்தோட்டம்!

எங்க பார்த்தாலும் பசுமையா இருக்கணும்னு ஆசைப்பட்டு சுவரைக் கூட விட்டு வைக்கலை. சுவரோட மேற்பகுதியில சின்னச் சின்னதா செடிகள் முளைக்கும். அதையெல்லாம் பிடுங்கிப் போடுவோம். அப்பறம்தான் சுவர்லயே செடி வளர்த்தா என்னனு யோசிச்சு, குரோட்டன்ஸ் செடிகளை வெச்சு விட்டுட்டோம்” என்ற கலிங்கராணி பராமரிப்பு முறைகளைச் சொன்னார்.

வேர்ப்புழுவுக்குக் கற்றாழை!
“எங்க வீட்டுச் செடிகளுக்கு பெரும்பாலும் இயற்கை உரத்தைத்தான் பயன்படுத்துறோம். தேமோர்க்கரைசல் தயாரிச்சு வாரம் இரண்டு முறை தெளிப்போம். சமையலறையில  வீணாகிற வெங்காயத் தோல், காய்கறிக் கழிவுகள், சாணம், மண்புழு உரம்னு எல்லாத்தையும் உபயோகப்படுத்துறோம். காய்கறிச் செடிகளுக்கு வெயில் கிடைச்சாத்தான், பூ கொட்டுறது நிற்கும். காய் பிடிப்பு அதிகமா இருக்கும். அதனால, வெயில்லதான் வெச்சிருக்கோம். அதிக வெயில் சமயத்துல நிழல்வலை போடுவோம். சப்போட்டாவுல வேர்ப்புழுத் தாக்குதல் இருந்துச்சு. எங்க வீட்டுல இருக்குற கற்றாழையை
எடுத்து துண்டு துண்டா வெட்டி வேருக்குப் பக்கத்துல புதைச்சு வெச்சவுடனே புழுக்கள் ஓடிடுச்சு. அதே மாதிரி வேற பூச்சிகள் வந்தா, பெருங்காயத்தை தண்ணியில கலந்து தெளிப்போம். ரொம்ப அதிகமா பூச்சிகள் வந்தா, வெள்ளைப் பூண்டு அரைச்சு வேப்பெண்ணெய், தண்ணீர் கலந்து தெளிப்போம்” என்று தொழில்நுட்பம் சொன்ன கலிங்கராணி,
“மாடித்தோட்டம் அமைக்க அதிக இடம் இருக்கணும்னு அவசியமில்லை. நமக்குத் தேவையான செடிகளைத் திட்டமிட்டு இருக்கிற இடத்துல வளத்தெடுத்துக்கலாம். ரொம்ப வெயில் அடிக்கிற சமயத்துல நிழல் வலை தேவைப்படும். பிளாஸ்டிக் வாளிகள், மண்தொட்டிகள்னு எதை வேண்டும்னாலும் உபயோகப்படுத்தலாம். மண், மண்புழு உரம், மாட்டு எரு மூணையும் கலந்து தொட்டிகள்ல நிரப்பி செடிகளை வளர்த்துட முடியும்” என்றார்.

நஞ்சில்லா காய்கறிகள்!
நிறைவாகப் பேசிய கலிங்கராணி, “மாடித்தோட்டம் மூலமா இயற்கைக் கீரைகள், பழங்கள்னு கிடைக்குது. தினசரி பூஜைக்குத் தேவையான பூக்களும் கிடைக்குது.
மூலிகைகள், காய்கறிகள்னு எதுக்கும் வெளிய போறதில்லை. எங்க தோட்டத்துல இருக்கிற காய்கறியை வெச்சு சமையலைத் திட்டமிட்டுக்குவேன். இது மூலமா காய்கறிச் செலவு, பூக்கள் வாங்குற செலவு எல்லாம் ரொம்பவே குறையுது. அதில்லாம, தினமும் மாடித்தோட்டத்துல வேலை செய்றது உடற்பயிற்சியாவும் அமைஞ்சிடுது. அதனால சுறுசுறுப்பாவும், சந்தோஷமாவும் இருக்கேன்” என்றார், உற்சாகமாக.

சுவைக்கூட்டும் தேமோர்!
தேமோர்க் கரைசல் என்பது பயிர் வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது. பயிர்களில் பூ எடுக்கும் சமயத்தில் இக்கரைசலைத் தெளித்தால், பூக்கள் அதிகமாகப் பூக்கும். இக்கரைசல் தெளிக்கப்பட்டு விளைந்த காய்கறிகள் மிகவும் சுவையாக இருக்கும்.
தயாரிப்பு முறை: ஒரு லிட்டர் புளித்த மோர், ஒரு லிட்டர் தேங்காய்ப்பால் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒரு மண்பானை அல்லது பிளாஸ்டிக் கேனில் இட்டு, நிழலான இடத்தில் வைத்து, தினமும் கரைசலைக் கலக்கி வரவேண்டும். ஏழு நாட்கள் இவ்வாறு செய்தால், தேமோர்க் கரைசல் தயாராகி விடும். 8-ம் நாள் ஒரு லிட்டர் தண்ணீரில் 50 மில்லி தேமோர்க் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, காலை அல்லது மாலை நேரத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்.

Roof Farm-17

நிழல்வலைக்குள் கீரைகள்... மூலிகைகள்... காய்கறிகள்!


குடும்பத்துக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்ளும் மாடித்தோட்ட விவசாயம், குடும்பத்தலைவிகள் பலரிடமும் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில், தங்கள் வீட்டில் அமைத்துள்ள மாடித்தோட்டம் குறித்து, நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், கோயம்புத்தூர், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை உஷாபானு.

வழிகாட்டிய பயிற்சி!
“நான், ‘அவள் விகட’னின் தீவிர வாசகி. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ‘அவள் விகடன், பசுமை விகடன் சேர்ந்து கோயம்புத்தூர்ல, நடத்தின வீட்டுத்தோட்ட கருத்தரங்கத்துல கலந்துக்கிட்டேன். அங்கதான், வீட்டுத்தோட்ட அமைப்பு, இடுபொருள் தயாரிப்பு, குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி, மூலிகைப் பூச்சிவிரட்டி...னு பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதோட, ஏற்கெனவே வெற்றிகரமா  வீட்டுத்தோட்டம் அமைச்சிருக்குற சிலரைப் பார்த்தும் விவரங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்பறம், மொட்டை மாடியில் தோட்டம் போடுவதற்கான வேலைகளை ஆரம்பிச்சேன்” என்று முன்னுரை கொடுத்த உஷாபானு, தொடர்ந்தார்.
எல்லாமே புதுசுதான்!
‘‘உபயோகப்படுத்தின பிளாஸ்டிக் பக்கெட்டுகள், கிரீஸ் டப்பாக்கள், பழைய பீப்பாய்கள், மரப்பெட்டிகள்னு பயன்படுத்தி நிறைய பேர், செடிகளை வளர்க்கிறாங்க. அதெல்லாம் செலவு குறைஞ்ச முறைகள்னாலும் அந்த மாதிரி பொருட்களைத் தேடி அலைய முடியலை. அதனால, பிளாஸ்டிக் தொட்டிகள், பைகளை கடையில புதுசா வாங்கி அதுலதான் காய்கறிகளை வளர்க்கிறேன்.
பலமுனைகளில் பாதுகாப்பு தரும் நிழல் வலை!
என்னோட மாடித்தோட்டத்தின் பரப்பளவு 500 சதுர அடி. முழுக்க நிழல் வலைப்பந்தல் அமைச்சு அதுக்குள்ளாறதான் தொட்டிகளை வெச்சிருக்கேன். நிழல் வலைக்குள்ளாற இருக்கிறதால, அதிக வெயில், அதிகப் பனி ரெண்டுமே செடிகளைப் பாதிக்கிறதில்லை. சீரான சீதோஷ்ண நிலை, செடிகளுக்குக் கிடைச்சிடுது. அதில்லாம பழங்களைக் கொத்தித் தின்ன வர்ற பறவைகளும் உள்ள வர முடியாது.
சுழற்சி முறையில் நடவு... ஆண்டு முழுவதும் அறுவடை!
மொத்தம் 120 தொட்டி மற்றும் பைகள் இருக்கு. ஒரே சமயத்துல எல்லா தொட்டிகளிலும் காய்கறிகளை வளர்க்காம, சுழற்சி முறையில வளர்த்துக்கிட்டு வர்றேன். அதனால வருஷம் முழுசும் எனக்குத் தேவையான காய்கறிகள் கிடைச்சுக்கிட்டிருக்கு. தக்காளி, கத்திரி, மிளகாய்ச் செடிகளை மூணு, மூணு தொட்டிகள்ல வெச்சிருக்கேன். வெண்டை, சுண்டைக்காய் ரெண்டையும் அஞ்சு அஞ்சு தொட்டிகள்ல வளர்க்கிறேன்.

ஏழு தொட்டிகள்ல காலிஃபிளவர் நடவு செய்திருக்கேன். நிழல் வலைக்குள்ள சிறப்பான பராமரிப்பும் இருக்கிறதால மலைப்பயிரான காலிஃபிளவர் கூட நல்லா வளருது. வழக்கமா இதுக்கு அதிக ரசாயனம் கொடுப்பாங்க. ஆனா, இங்க இயற்கை முறையில வளர்த்திருக்கோம். அடுத்து கேரட்டும் விதைக்கலாம்னு இருக்கோம். கீரையும், சூப் பயன்பாட்டுக்காக ஒரு முருங்கைச் செடியும் இருக்கு. இலைகளை மட்டும் அறுவடை செய்துட்டு இருக்கேன். அதுபோக, பாலக் கீரை, மணத்தக்காளி, தண்டுக்கீரை, புளிச்சக்கீரைகளை அஞ்சு அஞ்சு பைகள்ல போட்டிருக்கேன்.
மூலிகைகளும் தொட்டியில்!
5 தொட்டிகள்ல முடக்கத்தான் செடிகள்; 4 தொட்டிகள்ல இன்சுலின் செடிகள் இருக்கு. முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கலந்து சாப்பிட்டா மூட்டுவலிகள் குணமாயிடும். இன்சுலின் செடி இன்சுலின் சுரப்புக் குறைபாட்டுக்கு நல்ல மருந்து. அப்பப்போ நேரம் கிடைக்கிறப்போ கொஞ்சம் கொஞ்சமா தோட்டத்தை விரிவுபடுத்திக்கிட்டிருக்கேன்!
குழந்தைகளின் விளையாட்டுக்களம்!
வீட்டுத்தோட்டம் அமைக்கிறதுல குழந்தைகள் உளவியலும் இருக்குது. டி.வி பார்க்கிறது தெருவில் இறங்கி விளையாடுறதுனு பொழுதைக்கழிக்கும் குழந்தைகளை விளையாட்டுப் போலவே வீட்டுத்தோட்டப் வேலைகளைச் செய்ய வைக்கலாம். பூவாளியில் தண்ணீர்த் தெளிப்பு, காய்ப் பறிப்பு, மூலிகைப் பூச்சிவிரட்டித் தயாரிப்பு மாதிரியான பணிகளை விளையாட்டுப் போட்டியாய் செய்ய வெச்சா ஆர்வமா செய்வாங்க. எங்க வீட்டுக்குழந்தைகளுக்கு விடுமுறை நாள்னா, மாடித்தோட்டம்தான் விளையாட்டுக்களம். அதனால, எங்க குழந்தைகளுக்கு காய்கறிகள், கீரைகள் பத்தி அடையாளம் தெரியுது. அதோட இயற்கை விவசாயம் பத்தியும் தெரிஞ்சு வெச்சிருக்காங்க” என்று சொல்லி தங்கள் சுட்டிகளை அறிமுகப்படுத்தினார்.
ஆகாஷ், ஆல்வின், ஷிவானி மற்றும் ஆஷிகா ஆகிய நான்கு குட்டி விவசாயிகள்தான் விடுமுறை நாட்களில் மாடித்தோட்டப் பராமரிப்பாளர்கள். மும்முரமாக தொட்டிகளை இடம் மாற்றி வைத்துக் கொண்டிருந்த அந்த நான்கு சுட்டிகளும், அதை ஆமோதிப்பது போல புன்னகை ஒன்றை வீசிவிட்டு, தங்கள் பணியில் முனைப்பானார்கள்.
நிறைவாகப் பேசிய உஷாபானு, “500 சதுர அடியில் இந்த மாடித்தோட்டம் அமைக்க 20 ஆயிரம் ரூபாய் செலவு பிடிச்சது. வீட்டுக் காய்கறிச் செலவுல இப்ப கணிசமானத் தொகை மீதமாகுது. நமக்குத் தேவையான கீரை, காய்கறிகள் விஷமில்லாமல் கிடைக்குது. குழந்தைகளுக்குள்ள அறிவுப்பூர்வமான சிந்தனை உருவாகுது. சுத்தம், சுகாதாரம், மகிழ்ச்சி, சிக்கனம்னு பல விஷயங்களையும் பிரதானமா கொடுக்கும் இந்த வீட்டுத்தோட்டம் ஒரு பரிசுத்த விவசாயம்தான்” என்று சிலாகித்தார்.

மாடித்தோட்டம் அமையுங்கள்... இப்படி!
தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம் ஆகிய இரண்டையும் கலந்து வைத்துக்கொண்டு இந்தக் கலவையில் ஒரு பங்கு, மணல் அரைப்பங்கு என எடுத்து தொட்டிகளில் நிரப்ப வேண்டும். அடுத்ததாக, மண்புழு உரம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா மற்றும் சூடோமோனஸ் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கலந்து இக்கலவையில் கொஞ்சம் தொட்டிகளில் சேர்த்து விதை அல்லது நாற்றை நடவு செய்ய வேண்டும்.
குழித்தட்டில் நாற்றுகள்!
கீரைகள், வெண்டை, அவரை, பாகல், புடலை, பீர்க்கன் போன்ற பயிர்களை நேரடியாக விதைக்கலாம்.  கத்திரி, மிளகாய், தக்காளி மற்றும் காலிஃபிளவர்
உள்ளிட்ட செடிகளை நாற்று மூலம்தான் நடவு செய்ய வேண்டும். இவற்றை குழித்தட்டில் விதைத்து நாற்றாக வளர்த்துக் கொள்ளலாம். தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், வளமான மண் இவை மூன்றையும் சரி சமமாகக் கலந்து குழித்தட்டுகளில் நிரப்பி... குழிக்கு ஒரு விதை என விதைக்க வேண்டும். தினமும் லேசான பூவாளிப்பாசனம் செய்ய வேண்டும். அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். நடவு செய்த ஒரு வாரம் கழித்து செறிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரத்தைத் தூவி விட வேண்டும். 20 முதல் 22 நாட்களில் நாற்றுகள் தயாராகிவிடும். கத்திரி நாற்றுகளை மட்டும் 30 முதல்  35 நாட்கள் வளர்த்து நடவு செய்ய வேண்டும்.

காய்ச்சலும் பாய்ச்சலுமாக தண்ணீர்...
தொட்டிகளில் உள்ள அனைத்துச் செடிகளுக்கும் காய்ச்சலும் பாய்ச்சலுமாகத்தான் பூவாளி மூலம் தண்ணீர் கொடுக்க வேண்டும். மழை பெய்யும் நாட்களில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை. தொட்டிகளில் தண்ணீர் தேங்கக்கூடாது. தொட்டிகளில் முளைக்கும் களைகளை அவ்வப்போது அகற்றி வர வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை, ஒவ்வொரு செடிக்கும் ஒரு கைப்பிடி மண்புழு உரம், கால் லிட்டர் பஞ்சகவ்யா என மேலுரமாகக் கொடுக்க வேண்டும். வனக்கல்லூரி விஞ்ஞானிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘ட்ரீ பால்’ மற்றும் ‘ட்ரீ ஆக்ட்’ ஆகிய இரண்டு இயற்கைப் பூச்சிவிரட்டிகள் மற்றும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசலையும் தேவைப்படும்போது  செடிகளுக்குத் தெளிக்கலாம்.


Roof Farm-16

 600 சதுர அடி...மாடியில் விளையும் பன்னீர் திராட்சை!
ஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ளும் விஷயங்களும், தொழில்நுட்பங்களும் இங்கே இடம்பிடிக்கின்றன.
‘பாடிய வாயும் ஆடிய காலும் சும்மா இருக்காது’ என்பார்கள். அதுபோலதான் விவசாயமும். கடும்வறட்சி காரணமாக வயலெல்லாம் காடாகி காய்ந்து போய் கிடக்கும் நிலையில்... ‘தன் வீட்டு மொட்டை மாடியையே திராட்சைத் தோட்டமாக்கி விவசாயத்தைத் தொடர்கிறார், ஒரு விவசாயி’ என்ற தகவல், நம்மை வந்தடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலூகா, சித்தூர் பஞ்சாயத்து, புளியம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ்தான் அந்த விவசாயி. அவரைச் சந்திப்பதற்காகப் பயணமானோம். வேடசந்தூர், எரியோடு சாலையில் பூத்தாம்பட்டி என்ற ஊர் எல்லையில், வடக்குத் திசையில் பிரியும் தார்ச்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, புளியம்பட்டி. போகும் வழியில் விவசாயத்தையே பார்க்க முடியவில்லை. கடுமையான வறட்சியில் நிலமெல்லாம் பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கின்றன. நீண்ட நாட்களாக பயன்பாடு இல்லாததால் துருப்பிடித்துக் கிடக்கின்றன, பம்ப்செட் மோட்டார்கள்.
சுமார் 100 வீடுகளே இருக்கும் சின்ன கிராமம். கோயிலை ஒட்டிய சிமென்ட் பாதையில் குறுகலான சந்தில் இருக்கிறது, செல்வராஜின் வீடு. வீட்டுவாசலில் இருக்கும் மல்லிகைச் செடியைக் கவாத்து செய்து கொண்டிருந்தவரைச் சந்தித்து, திராட்சைத் தோட்டம் பற்றிக் கேட்டதும் ஆர்வமானவர், மாடிக்கு அழைத்துச் சென்றார். மொட்டை மாடியில் வெயிலே தெரியாத வகையில் பசுமைப் போர்வை போர்த்தி இருந்தது, பன்னீர் திராட்சைப் பந்தல். உள்ளே கொத்துக்கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன திராட்சைப் பழங்கள். திராட்சைத் தோட்டத்துக்குள் நுழைந்த பிரமிப்பில் இருந்த நம்மிடம் ஒரு கொத்தை நீட்டி, ‘‘சாப்பிட்டுப் பாருங்க” எனக் கொடுத்து விட்டு, பேசத் தொடங்கினார், செல்வராஜ்.
ஏமாற்றிய மழை!
‘‘எங்களுக்குப் பரம்பரையா விவசாயம்தான் தொழில். அப்பா காலத்துல நல்லபடியாத்தான் சம்சாரித்தனம் பண்ணிக்கிட்டிருந்தோம். ஒரு காலத்துல முருங்கை, நெல்லு, கடலைனு பெருங்கொண்ட விவசாயம் நடந்துகிட்டிருந்த ஊருதான். இடையில, மழைத் தண்ணியில்லாம கெணறுக வத்திப்போச்சு. எங்க ஊர்ல நல்லா மழை பேஞ்சி ஏழெட்டு வருஷமாச்சு. காசு பணம் இருக்கிறவங்க போர் போட்டு வெள்ளாமை பண்ணுனாங்க. என்ன மாதிரி இல்லாதவங்க, கெணத்தை அப்படியே போட்டுட்டு கூலி வேலைக்குக் கிளம்பிட்டோம். உழவு ஓட்டுறது, பிளம்பிங், கொத்தனார், கம்பி கட்டுறதுனு கிடைக்கிற வேலைக்குப் போயி பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன்.
சின்னவயசுல இருந்தே எனக்கு மரம் வளர்க்கிறதுல ரொம்ப ஆர்வம். வீட்டைச் சுத்தி மாதுளை, மல்லிகைனு நட்டு வளர்த்துக்கிட்டு இருந்தேன். எங்கயாவது வெளியூருக்குப் போனா, அங்க இருந்து ஏதாவது கன்னை வாங்கிட்டு வந்து நட்டு வளர்ப்பேன். ஆறு வருஷத்துக்கு முன்னகூட கேரளாவுக்கு கூலி வேலைக்குப் போயிட்டு வரும்போது, கொஞ்சம் கன்னுகளை வாங்கிட்டு வந்து ஊர் எல்லையில இருக்கிற கோவில் பக்கத்துல நட்டு வெச்சிருக்கேன். ஆல், அரசு, புங்கன் மாதிரியான மரங்களோட நாத்துகளை வாங்கிட்டு கொஞ்சம் பெருசா வளர்த்து, கோவில்களுக்கு இலவசமா கொடுத்துடுவேன்.

கற்றுக்கொடுத்த விவசாயிகள்!
என் வீட்டம்மா, வேலைக்குப் போற வீட்ல ரெண்டு திராட்சைக் கொடிகள் நட்டு வெச்சிருந்ததைப் பாத்துட்டு வந்து சொன்னாங்க. உடனே, எனக்கும் திராட்சை நடணும்னு ஆர்வமாகிடுச்சு. அந்த வீட்டுல போய் பார்த்தேன். அப்பறம் திண்டுக்கல் மாவட்டத்துல, திராட்சை அதிகமா விளையுற சின்னாளபட்டி பக்கத்துல இருக்கிற ஊத்துப்பட்டியில போயி சில விவசாயிங்களோட தோட்டங்களைப் பாத்தேன். திராட்சை நடவு, பராமரிப்பு, கவாத்துனு எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்தாங்க. சாகுபடி முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டு, அவங்ககிட்டயே முப்பது குச்சி வாங்கிட்டு வந்து பிளாஸ்டிக் பையில வெச்சு வளர்த்து நடவு போட்டேன்” என்ற செல்வராஜ், இவற்றை வளர்த்தெடுக்க கொஞ்சம் மெனக்கெடத்தான் செய்திருக்கிறார்.
10 செடிகளில் படர்ந்த பந்தல்!
“வீட்டைச் சுத்தி ரெண்டடிதான் இடமிருக்கு. மாடியில திராட்சைப் பந்தல் போட்டுக்கலாம். ஆனா, மாடியில செடியை நட முடியாது. தொட்டிகள்ல வெச்சாலும் வேர் பெருசானா தொட்டி தாங்காது. என்ன பண்ணலாம்னு யோசிச்சு, வீட்டைச் சுத்தி செடியை நட்டு, கயிறு மூலமா மாடிக்குக் கொடியை ஏத்தி, பந்தல்ல படர விட்டேன். பந்தல் அமைக்கிறதுக்கு பழைய இரும்புக் குழாய்களைப் பயன்படுத்தியிருக்கேன். இதுக்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாச்சு.
ஆரம்பத்துல ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். இப்ப கொத்துக்கொத்தா பழங்களைப் பாக்கும்போது, அந்த கஷ்டமெல்லாம் காணாமப் போயிடுச்சு. இதை நட்டு ரெண்டு வருஷமாச்சு. இப்ப என்கிட்ட 10 செடிகள் இருக்கு. அதுகளோட கொடிதான் மாடியில படர்ந்திருக்கு. வருஷத்துக்கு ஒரு தடவை 10 கிலோ கடலைப்பிண்ணாக்கை வாங்கி, தண்ணியில கரைச்சு, செடியோட வேர்கிட்ட ஊத்துவேன். காய் பிடிக்குற நேரத்துல ஒரு பூச்சி வரும். அதுக்கு மட்டும் கடையில பூச்சிக்கொல்லி வாங்கித் தெளிப்பேன். இதுபோக வேற எதையும் கொடுக்குறதில்ல.

300 கிலோ மகசூல்!
இதுவரைக்கும் மூணு தடவை பழம் வெட்டியிருக்கோம். 800 சதுர அடியில மாடி இருக்கு. அதுல 600 சதுர அடியில பந்தல் இருக்கு. முதல் தடவை 70 கிலோ கிடைச்சது. அடுத்த தடவை 130 கிலோ. இந்தத் தடவை இதுவரைக்கும் 150 கிலோவுக்கும் மேல எடுத்திட்டோம். இன்னும் 150 கிலோ கிடைக்கும்னு நினைக்கிறேன். செலவுனு பாத்தா வருஷத்துக்கு 1,500 ரூபாய் ஆகும். இந்தப் பழங்களை விலைக்குக் கொடுக்கறதில்லை. வீட்டுத்தேவை போக, சொந்தக்காரங்களுக்கும், ஊர்ல இருக்கிற சின்னப் பசங்களுக்கும் இலவசமா கொடுத்திடுவேன். அதுபோக, அணில், காக்கா வந்து தின்னுட்டுப் போகும். அதை நான் தடுக்கறது இல்லை. அதுக தின்ன மீதிதான் நமக்கு” என்ற செல்வராஜ்,
“மொதல்ல, வெவசாயம் பாக்காம, பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கும். இந்தத் தோட்டம் போட்ட பின்னாடி, அந்த நினைப்பு இல்லை. காலையில, சாயந்திரம்னு எப்ப ஓய்வு கிடைச்சாலும் மாடிக்கு வந்திடுவேன். இதையும் தோட்டமா நினைச்சுத்தான் பாத்துக்கிட்டு இருக்கேன்” என்று சொன்னபோது, அவருடைய மனதில் குடிகொண்டிருக்கும் மகிழ்ச்சியை நன்றாகவே உணர முடிந்தது!

(Thanks Vikatan)

Roof Farm-15

‘‘வளரிளம் பருவத்துக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கொடுப்பது மிக முக்கியம். அதிலும் நார்ச்சத்து அதிகம் கொண்ட கீரை வகைகளில் ஒன்றாவது அவர்களின் அன்றாட உணவுப் பட்டியலில் இருந்தாக வேண்டியது அவசியம்’’ என்கிறார், தனது மருத்துவமனை மாடியில், ‘தொட்டிப் பாத்திகள்’ அமைத்து பலவிதமான கீரைகளை வளர்த்து வரும் மகப்பேறு மருத்துவர் மங்கையர்க்கரசி. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரில் உள்ளது இவரது மருத்துவமனை.
‘‘20 வருஷமா இங்க ஆஸ்பத்திரி நடத்திக்கிட்டு வர்றேன். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கேன். எந்தப் பெண்ணும் சுகப்பிரசவம் ஆகணும்னுதான் ஆசைப்படுவாங்க. ஆனால் இப்ப, சுகப்பிரசவம் குறைஞ்சு அறுவை சிகிச்சை மூலமாகத்தான் பெரும்பாலான பிரசவங்கள் நடக்குது. இதுக்குக் காரணம், கர்ப்பிணிப் பெண்களோட உடம்புல போதுமான சத்துக்கள் இல்லாம இருப்பதுதான். இதுனால, பிறக்கும் குழந்தைகள் எடை குறைவா பிறக்குது. என்கிட்ட சிகிச்சைக்கு வர்ற கர்ப்பிணிப் பொண்ணுங்ககிட்ட சத்தான உணவைச் சாப்பிடுங்கனு ஆலோசனை சொல்றதை வழக்கமா வெச்சிருக்கேன். நாம் ஆலோசனை சொல்றதோட நிறுத்திக்கக்கூடாது. அதுக்கான தீர்வையும் சொல்லணும்னு முடிவு செய்துதான் இந்த மாடித்தோட்டத்தை அமைச்சேன்” என்ற மங்கையர்க்கரசி தொடர்ந்தார்.

“சிமெண்ட் தொட்டிகள் அமைச்சு, அதில் செம்மண், ஆட்டு எரு கலந்து 5 வகை கீரைகளை வளர்த்துக்கிட்டு வர்றேன். 30 நாட்கள்ல அறுவடைக்கு வரக்கூடிய சிறுகீரை, அரைக்கீரை, செங்கீரை, பாலக்கீரைகளோட 40 நாட்கள்ல மகசூல் தரக்கூடிய கொத்தமல்லித்தழையும் விதைச்சிருக்கேன். அடியுரமா, ஆட்டு எரு கொடுக்கிறதால, மேலுரம் எதுவும் கொடுக்கிறதில்லை. விதைச்ச 10-ம் நாள் பஞ்சகவ்யா கரைசலை 10 லிட்டர் தண்ணிக்கு 200 மில்லினு கலந்து தெளிக்கிறோம். எந்த நோய் தாக்குதலும் இல்லாமல் கீரைகள் வளர இந்தப் பராமரிப்பே போதுமானதா இருக்கு. எங்கள் வீட்டுத்தேவைக்குப் போக மீதியை மருத்துவமனைப் பணியாளர்களுக்கு கொடுத்துடுறோம். அதுபோக, காலை, மாலை நேரங்கள்ல நடைபயிற்சி செய்யுற கர்ப்பிணிப் பெண்களை அழைச்சுக்கிட்டு வந்து கீரைப் பாத்திகளைக் காட்டி, மருத்துவ குணங்களை விளக்கி விழிப்பு உணர்வு கொடுக்கிறேன். கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மதிய உணவில் ஒரு கீரை வகைப் பொரியலை எடுத்துக்கணும். சாதத்தை கீரைப் பொரியலுடன் பிசைந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால், ரத்தசோகை நோயைக் கட்டுபடுத்தும் இரும்புச்சத்து கிடைக்கும், குழந்தை போதிய எடையுடன் வளரும். மூச்சுத்திணறல், மலச்சிக்கல் போன்ற உபாதைகளைத் தடுக்கலாம்’’ என்ற மங்கையர்க்கரசி நிறைவாக,

சகாயமான விலையில் கிடைக்கும் சத்தான உணவு!
‘‘சிறிய அளவிலான தோட்டம் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்கணும். அதிக இடவசதி இல்லாதவங்க ஒரே ஒரு முருங்கைச்செடியை மட்டும் வளர்த்தா கூடப் போதும். முருங்கைக் கீரை, பூ, காய் அனைத்திலும் உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துக்களும் இருக்குது. வளரிளம் குழந்தைகளுக்குத் தொடர்ந்து கீரை உணவு கொடுத்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும். ரத்த அணுக்கள் பெருகும். கண்பார்வை தெளிவாகும். மூளை சுறுசுறுப்படையும்“ என்றார்.

மூன்று பருவங்கள்... தக்க பக்குவங்கள்!
மாடித்தோட்டத்தில் தொட்டிகள் அமைப்பது பற்றி பேசிய மங்கையர்க்கரசி, ‘‘குறுகிய நாளில் அறுவடைக்கு வரக்கூடிய கீரை வகைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால், அதற்கு பாத்தி முறை சாகுபடிதான் சரிப்பட்டு வரும். மொட்டை மாடி கைப்பிடிச் சுவரை ஒட்டி 4 அடி அகலத்தில் ஒரு அடியுரம் கொண்ட வரப்புச் சுவர் ஒன்றை ஹாலோபிரிக்ஸ் கற்களைப் பயன்படுத்தி அமைத்துக் கொள்ள வேண்டும். நமது வசதிக்கு ஏற்றவாறு நீளத்தை வைத்துக் கொள்ளலாம் (இவர் அமைத்துள்ள தொட்டியின் நீளம் 35 அடி. அகலம் 4 அடி). தொட்டியின் சுவர்களில் நீர் கசியாதபடி சிமெண்ட் பூச வேண்டும்.
தொட்டியில் கால் அடி உயரத்துக்கு சலித்த மணலைக் கொட்டி பரப்பி விட வேண்டும். அடுத்து அரை அடி உயரத்துக்கு கல் கட்டிகள் இல்லாத வளமான செம்மண்ணைக் கொட்டி ஒரே சீராகப் பரப்பி விட வேண்டும். ஆட்டு எரு, தொழுவுரம் இரண்டையும் சரி சமமாகக் கலந்து அதில், 25 கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ உயிர் உரம் ஆகியவற்றைக் கொட்டி செம்மண் மீது பரப்பி... பாத்தி நிறைய சொதசொதப்பாக தண்ணீர் விட வேண்டும். இரண்டு நாட்களில் தண்ணீர் சுண்டிப்போய் மண் காய்ந்து விடும்.
இந்தச் சமயத்தில் கீரை விதைகளை பாத்திகளில் தூவி விட்டு, உடனே முள்கொத்து கொண்டு உழவு செய்வது போல ஒரே ஒரு முறை நீளவாக்கில் கீறி விடவேண்டும். இப்படி செய்வதின் மூலம் தூவிய விதைகளை மண் மூடிவிடும். தொடர்ந்து பூவாளி மூலம் லேசாக நீர் தெளிக்க வேண்டும். விதைத்த 5-ம் நாளில் கீரைகள் முளைத்து வரத்தொடங்கும். அவ்வப்போது களைகளைக் கைகளால் பிடுங்கி அப்புறப்படுத்த வேண்டும். தொட்டிப்பாத்தி முழுவதும் ஒரே ரக கீரையைச் சாகுபடி செய்யக் கூடாது. பல வகைக்கீரைகளும் நமக்கு தேவை என்பதால், 5 அடி நீளம் கொண்ட பாத்திகளாகப் பிரித்துத் தேவைப்படும் கீரை விதைகளை விதைக்கலாம். கீரைகள் குறுகிய காலபயிர் என்பதால், மேலுரங்கள் எதுவும் கொடுக்கத் தேவையில்லை. ஏற்கெனவே கொடுத்துள்ள அடியுரங்களே போதுமானது. ஒரு நாள் விட்டு ஒருநாள் லேசான தண்ணீர்ப் பாசனம் மட்டும் கொடுத்தால் போதுமானது.
கீரை விவசாயத்துக்கு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை ஏற்ற பருவமாகும். இந்த மாதங்களில் நிலவும் தட்பவெப்ப நிலை நல்ல மகசூலைக் கொடுக்கும். அதைத் தொடர்ந்து வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்குப்பருவ மழை வரும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மழை மாதங்களில் கீரைத் தொட்டிகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை வரும் அறிகுறி தென்பட்டதும். தார்பாலின், அல்லது பிளாஸ்டிக் படுதா பயன்படுத்தி மழை நீர் விழாமல் மூடி வைக்கலாம். மழை விட்டதும் அவசியம் தார்பாலினை அகற்ற வேண்டும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொட்டும் பனிப்பொழிவின் காரணமாக கருகல் நோய் வரும் வாய்ப்பு உள்ளது. இதைப் போக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி வேப்பெண்ணெயுடன் சோப்பு நுரை கலந்து கீரை மீது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
தொடர்ந்து, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதக் கோடையில் ஏற்படும் வெப்பச் சூட்டில் கீரைகள் கருகிவிடும். இந்த மாதங்களில் அதை அறுவடைக்குக் கொண்டுவருவது ரொம்ப கடினம். சரியான பக்குவம் செய்தால் மட்டுமே மகசூலை எடுக்கமுடியும்.
கோடையில், பச்சை தென்னங்கீற்றுகளை வெட்டி வந்து நீளத்தொட்டிகளின் மேல் மூடிவைத்து விட்டால் போதும், வெயிலில் இருந்து கீரைகளைக் காப்பாற்றி விடலாம். மூடிய கீற்றுகளை மாலைவேளையில் அப்புறப்படுத்தி விட வேண்டும். காய்ந்த ஓலைக்கீற்றுக்களாக இருக்கும் பட்சத்தில், அதன் மீது தண்ணீரைத் தெளித்து ஈரப்படுத்திய பின்னர் கீரைத்தொட்டிப் பாத்திகளை மூடவேண்டும். இப்படியாக, மூன்று பருவங்களிலும் அதற்கு ஏற்ற பக்குவம் செய்து கீரைகளை வளர்த்தால்தான் நல்ல மகசூலை எடுக்க முடியும்.

Roof Farm-14

வீட்டுத்தோட்டம் அமைப்பதென்றால்... நிறைய இடம் தேவை, நிறைய நேரம் தேவை என்றெல்லாம் மலைத்துத்தான் பலரும் தயக்கம் காட்டுகிறார்கள். ஆனால், “அதெல்லாம் தேவையேயில்லை. மனம் இருந்தால் போதும் மார்க்கம் உண்டு’’ என்கிறார், மாடித்தோட்டம், மற்றும் புறத்தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்து வரும், கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவராஜா.

“அடிப்படையில் நான் ஒரு மென் பொருள் பொறியாளர். வளர்ந்தது எல்லாமே கிராமத்திலதான். அதனால விவசாயம் சார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் அதிகம். சொந்த வீடு வாங்கி தோட்டம் அமைக்கணும்னு நினைச்சேன். சென்னையில் வசிக்கும் போது அது முடியலை. கோயம்புத்தூருக்கு வந்த பின்னாடி, தோட்டம் அமைக்கறதுக்காகவே காலி இடம் இருக்கிற மாதிரியான வீட்டைத் தேடிப் பிடிச்சு வாங்கினேன்.
நல்ல இடமா அமைஞ்சதால மரங்களும் வளர்க்க முடிவு பண்ணினேன். பெருசா கிளையடிக்கிற மரமா இல்லாம, கொய்யா, நெல்லி, மா, எலுமிச்சை, சீதாப்பழம், தென்னை, சப்போட்டா, முருங்கைனு ரகத்துக்கு ஒண்ணா எட்டு மரங்களை நட்டேன். வீட்டுத்தோட்டம் பத்தி சில இடங்கள்ல பயிற்சி எடுத்துக்கிட்டு... நாலு வருஷத்துக்கு முன்னாடி வீட்டைச் சுத்தி இருந்த காலி இடங்கள், மொட்டை மாடினு எல்லா இடத்துலயும் தோட்டம் அமைச்சேன்” என்ற சிவராஜா அவரது வீட்டுத்தோட்டச் செடிகளைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
ஆன்லைன் மூலமாக நாட்டு விதைகள்!

‘‘மாடியில் அதிக வேர் விடுற செடிகளை வளர்க்க முடியாது. அதனால கத்திரி, தக்காளி, மிளகாய், முட்டைக்கோஸ், 8 வகை கீரைகள், முலாம்பழம், வெங்காயம், சோளம், மக்காச்சோளம், வெண்டை மாதிரியான பயிர்களை மாடியில வளர்க்கிறேன். பெரும்பாலும் நாட்டு விதைகளைத்தான் பயன்படுத்துறேன். இப்ப ஆன்லைன்ல கூட நாட்டு விதைகள் கிடைக்குது.
20 பைங்க உள்ள தோட்டம் அமைக்க 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம். ஆனா, ரெண்டே மாசத்துல அதை ஈடுகட்டிடலாம். மாடித்தோட்டத்துக்கு நிழல் வலை அமைக்கணும்ங்கிற அவசியம் கிடையாது.

நாங்க, ஒரே நேரத்திலதான் எல்லா செடிகளையும் விதைப்போம். முழுமையா அறுவடை முடிஞ்ச பிறகு, ஒரு மாசத்துக்கு தோட்டத்துக்கு ஓய்வு கொடுத்திடுவோம். தோட்டம் அமைக்கிறதோட முக்கிய நோக்கமே நம்மளோட ஆரோக்கியமும், திருப்தியும்தான். அது இப்ப முழுமையா கிடைக்கிறதா நான் நம்புறேன். எங்க தேவைக்கு அதிகமாகவே காய்கறிகள் விளையுது.  அதை பக்கத்து வீடுகளுக்குக் கொடுக்கிறோம்” என்ற சிவராஜா நிறைவாக,
நகர வாழ்க்கையிலும் இயற்கை!
“வீட்டைச்சுத்தி மரங்கள் இருக்கறதால தினமும் குருவி, மைனா மாதிரியான பறவைங்க, வீட்டுக்கு வருது. சில நேரத்துல இங்கயே கூடு கட்டுது. இதையெல்லாம் பார்க்கிறப்ப மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு.
பசுமையான சூழல் இருக்கிறதால வீடு எப்பவும் குளுமையாவே இருக்கு. வீட்டுத்தோட்டம் அமைக்கிறதுல நான் கத்துக்கிட்ட, கத்துக்கிற விஷயங்களை என்னோட வலைப்பக்கத்துல பதிவு செய்துக்கிட்டு வர்றேன். அதைப் பார்த்தும் பலர் ஆர்வமா இதுல இறங்கியிருக்காங்க. நீங்களும் வீட்டுத்தோட்டம் அமைச்சுப் பாருங்க... நகர வாழ்க்கையில் கூட இயற்கையை ரசிக்க முடியும்’’ என்றார்.

Roof Farm-13

வீட்டுத்தோட்டம் அமைப்பதின் முக்கிய நோக்கம்... தமது குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை ரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தாமல் நாமே உற்பத்தி செய்துகொள்வதுதான். ‘நஞ்சில்லாத காய்கறிகளைச் சாப்பிடுங்கள்’ என்று நமக்கு அறிவுறுத்துபவர்கள், பெரும்பாலும் மருத்துவர்கள்தான். இப்படி அறிவுரை சொல்வதோடு மட்டும்  நிறுத்திக்கொள்ளாமல் பல மருத்துவர்கள் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். பலர், வீட்டுத்தோட்டம் அமைத்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் நகரில் மருத்துவமனை நடத்தி வரும் மகப்பேறு மருத்துவர் ஈஸ்வரி.

தன்னுடைய மாடித்தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த ஈஸ்வரியைச் சந்தித்தோம். ‘‘என்னோட கணவர் அருள் நல்லசாமியும் மருத்துவர்தான். அவருக்கு புகைப்படம் எடுப்பது ரொம்ப பிடிக்கும். இயற்கை மேல ரொம்ப ஈர்ப்பு அவருக்கு. இயற்கை வளங்களும் வனவாழ் இனங்களும் அழியக்கூடாதுங்கிற எண்ணம் கொண்டவர். படிக்கிற காலத்தில் மலைவாழ் மக்களைத் தேடிப் போயிடுவார். காடுகள், மலைகள்னு சுத்தி அங்க இருக்குற மக்களுக்கு உதவி செய்றது, இயற்கையைப் புகைப்படம் எடுக்குறது அவருக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வகையிலதான், மாடித்தோட்டம் போட்டு இயற்கை விவசாயம் செய்றோம். மருத்துவமனையும் வீடும் ஒரே இடத்தில் இருக்கிறதால தோட்டத்தைப் பராமரிக்கிறது சுலபமா இருக்கு.
இப்போ, பத்திரிகை, தொலைக்காட்சி எல்லாத்துலயும் பூச்சிக்கொல்லியால் வர்ற பாதிப்புகள் பத்தி விழிப்பு உணர்வு ஏற்படுத்திக்கிட்டே இருக்காங்க. தாய்ப்பால்லகூட விஷ மூலக்கூறுகள் இருக்கிறதா சொல்றாங்க. மருத்துவர்ங்கிற முறையில் எங்ககிட்ட சிகிச்சைக்கு வர்றவங்ககிட்ட விஷமில்லா காய்கறிகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்திக்கிட்டிருக்கோம். மாற்றம் நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்னுதான் மாடித்தோட்டம் அமைச்சோம்” என முன்கதை சொன்ன ஈஸ்வரி, தனது மாடித்தோட்டம் குறித்து விளக்கினார்.
சிமென்ட் தொட்டியில் காய்கறி!

“ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பைகளில்தான் காய்கறிகள், கீரைனு வளர்த்தோம். அதுல வேர் அதிக ஆழத்துக்குப் போற கத்திரி, தக்காளி மாதிரியான பெரிய செடிகளை வளர்க்க முடியலை. அதுக்கப்பறம்தான் நண்பர் ஒருத்தர் சொன்ன ஆலோசனையை வெச்சு... மாடி சுற்றுச்சுவரை ஒட்டி ஹாலோபிளாக் கல்லால நீளமா தொட்டி கட்டி அதுல செடிகளை வளர்க்குறோம். 10 அடி நீளம், 3 அடி அகலம், 5 அடி உயரங்கிற அளவுல 6 தொட்டிகள் இருக்கு. அதில் 2 அடி உயரத்துக்கு சலித்த மணலைக் கொட்டி அடுத்த அடுக்கா அரையடி உயரத்துக்கு மண்புழு உரம் போட்டிருக்கோம். அடுத்த அடுக்கா இரண்டடி உயரத்துக்கு கட்டியில்லாத செம்மண்ணைப் போட்டு அதுலதான் செடிகளை நட்டிருக்கோம். அடியில மணல் இருக்கிறதால தொட்டியில கசிவு இருக்காது.
மண்புழு உரம் ஈரப்பதத்தோடவே இருக்கும். செம்மண் போட்ட பிறகு ஒவ்வொரு தொட்டிக்கும் 10 கிலோ ஆட்டு எருவை, பொடியாக்கி தூவி மண் நல்லா ஈரமாகுற அளவுக்கு தண்ணீர் ஊத்தி ரெண்டு நாள் விட்டா, தண்ணீர் சுண்டிடும். அதுக்கப்பறம் லேசா தண்ணீர் விட்டு காய்கறி நாற்றுக்களை ஈர நடவு செய்திருக்கோம். அவரை, வெண்டை, தக்காளி, மணத்தக்காளினு கீரை, காய்கறிகள் எல்லாத்தையும் சாகுபடி செய்றோம். தோட்டத்துப் பாத்தியில வளர்ற மாதிரி இங்க செடிகள் வளருது.
15 நாளுக்கு ஒரு முறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து தெளிப்போம். பூச்சிகள் தென்பட்டால் 5 மில்லி நீம் ஆயிலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்போம். ஒவ்வொரு முறை பூக்கும் பருவத்திலும் பொடித்த ஆட்டு எருவை செடிகளோட வேர்ப்பகுதியில தூவி தண்ணீர் விடுவோம். அடுத்து சில தொட்டிகள்ல கம்பு நடலாம்னு இருக்கோம். கம்பு மணிகளைச் சாப்பிட வர்ற பறவைகள் செடிகள்ல இருக்குற பூச்சிகளையும் சாப்பிட்டுடும்ல” என்று இயற்கைத் தொழில்நுட்பம் சொன்ன ஈஸ்வரியைத் தொடர்ந்தார், அவருடைய கணவரான மருத்துவர் அருள்நல்லசாமி,
‘‘காய்கறிகள் மட்டுமல்ல கேழ்வரகு, தினை, வரகு போன்ற சிறுதானியப் பயிர்களையும் மாடியில் வளர்க்க முடியும். அதற்கு இந்தத் தொட்டி பாத்தி முறை சிறப்பானது. மாடியில் நெல் வயல் கூட அமைக்கலாம். வரும் காலங்களில் கண்டிப்பாக எங்கள் வீட்டு மாடியில் பச்சை வயலைப் பார்க்கலாம்’’ என்றார், நம்பிக்கையுடன்!

(Thanks Vikatan)

Roof Farm-12

வீட்டுத்தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கு காய்கறி விலையேற்றம் பற்றியும், விஷக் காய்கறிகள் பற்றியும் எந்தக் கவலையும் இருப்பதில்லை. அதுமட்டுமல்ல, காய்கறிகளை வளர்ப்பதற்காக பணத்தை அள்ளிக் கொட்டாமல், பெரும்பாலும் மண்தொட்டி, பிளாஸ்டிக் வாளி, பழைய டப்பாக்கள், தார்ப்பாலின் பைகள் என விலை குறைவான பல்வேறு உபகரணங்களில்தான் வீட்டுத்தோட்டங்களில் காய்கறி, கீரை... என சாகுபடி செய்கிறார்கள். இந்த வகையில், ஈரோடு மாநகரில் வசித்து வரும் நந்தினி மற்றும் கல்பனா ஆகியோர் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் மரப்பெட்டிகளில் காய்கறிச் செடிகளை வளர்த்து வருகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்போமா...

பழக்கடையில் தோன்றிய யோசனை!
முதலில் பேசியவர் நந்தினி. “எங்க வீட்டு மாடியில தோட்டம் அமைச்சு ரெண்டு வருஷமாச்சு. வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான உபகரணங்கள் எதையும் காசு கொடுத்து வாங்கக்கூடாதுங்கிற முடிவில் இருந்தோம். எங்க குடும்பத் தேவைக்கு மட்டும் காய்கறிகளை உற்பத்தி செஞ்சா போதும்னும் நெனைச்சோம். அதனால, பிளாஸ்டிக் பக்கெட், கிரீஸ் டப்பா, பீப்பாய்னு பழைய பொருட்களைப் பயன்படுத்தி செடிகளை வளர்க்க ஆரம்பித்தோம். ஆனா, அந்த மாதிரி பொருட்களைக் கழுவுறது பெரிய பாடா இருக்கும். அந்த சமயத்துல ஒரு பழக்கடையில காலியான மரப்பெட்டிகளைப் பார்த்தோம். அதுல செடிகளை வளர்த்தா என்னானு யோசிச்சு, சில பெட்டிகளை வாங்கிட்டு வந்தோம். பழங்கள் வர்ற பெட்டிகள்ல காற்றோட்டத்துக்காக இடைவெளி கொடுத்திருப்பாங்க. அந்த மாதிரி பெட்டிகள்ல பலகையைப் பிரிச்சு ஆணி அடிச்சு, 4 அடி நீளம், 4 அடி அகலம், 3 அடி உயரம் உள்ள பெட்டிகளா மாத்திக்கிட்டோம்.
பெட்டிக்குள்ள பிளாஸ்டிக் ஷீட் விரிச்சு, ஒரு பங்கு செம்மண், ஒரு பங்கு ஆட்டு எரு, அரைபங்கு மண்புழு உரம்னு போட்டு 10 பெட்டிகளையும் தயார் செய்தோம். கத்திரி, தக்காளி, வெண்டை மாதிரியான செடிகள் ஆழம் அதிகமா ஊடுருவும். ஆனா, கீரை, அவரை, வெங்காயம் மாதிரியான பயிர்களோட வேர்கள் அதிகமா ஊடுருவாது. இந்த மாதிரி செடிகள் வளர்க்க பெட்டியோட உயரம் 2 அடி உயரம் இருந்தா போதும். அதுக்கேத்த மாதிரிதான் பெட்டிகளைத் தயார் செய்தோம். பெட்டியில் செடிகளுக்கு ஊத்துற தண்ணீர்ல அதிகப்படியான தண்ணீர் வெளிய வர்றதுக்கு துளைகள் அமைச்சிருக்கோம். இந்தமாதிரி மரப்பெட்டிகள்ல செடிகள் வளர்க்குறப்போ அதை தரையில் வைக்கக்கூடாது. செங்கல் கற்களை அடுக்கி அது மேல வைக்கலாம்” என்ற நந்தினியைத் தொடர்ந்தார், கல்பனா.
அவசியமான மூன்று!
‘‘மாடித்தோட்டத்தில் வளர்ந்து நிற்கிற பலவகைச் செடிகள், நகரத்தின் மாசுக்களை சுத்தப்படுத்தி நல்ல காற்றை நமக்குக் கொடுக்கிறதுக்கு துணை செய்யுதுங்க. கொஞ்சம் மெனக்கெட்டா சுத்தமான தண்ணீரையும் நம்ம வீட்டுல இருந்தே எடுத்துக்க முடியும். 50 சதுர அடி மாடிப்பரப்புல வருஷத்துக்கு 5 ஆயிரம் லிட்டர் மழைநீரைச் சேகரிக்க முடியும். அப்படி கிடைக்கிற மழைநீர்ல தேத்தான் கொட்டையைப் போட்டு வெச்சா, தண்ணீர் சுத்தமாயிடும். இப்படி கிடைக்கிற தண்ணீரைக் குடிநீரா பயன்படுத்தலாம். அதனால மாடித்தோட்டம் போடுறவங்க, மழைநீரையும் அறுவடை பண்ணணும். மாடித்தோட்டம் இருக்குற வீடுகளுக்கு ஏ.சி தேவையேயில்லை. மாடித் தோட்ட செடிகளே நம் வீட்டுல குளுகுளு சூழலை ஏற்படுத்திடும். அதே மாதிரி வீட்டுக்கழிவு நீர் போற பாதையில கல்வாழைச் செடிகளை
நட்டு வைத்தால், கழிவுநீர் சுத்தமாயிடும். இந்தத் தண்ணீரை செடிகளுக்குப் பயன்படுத்தலாம். இந்த முயற்சிகள் மூலமா... விஷமில்லாத காய்கறிகளையும் நாமளே உற்பத்தி செய்துக்க முடியும்” என்ற கல்பனா நிறைவாக,
“தூசியில்லா காற்று, மாசில்லா குடிநீர், நஞ்சில்லா உணவு... இந்த மூணும்தாங்க மனித வாழ்க்கைக்கு அடிப்படையான விஷயங்கள். மாடித்தோட்டம் அமைச்சிட்டா இந்த மூணும் நமக்குக் கிடைச்சுடும்” என்று சொன்னார் சிரித்தபடியே!

மண் மற்றும் நீர்ப் பரிசோதனை அவசியம்!
புறக்கடைத் தோட்டங்கள் அமைப்பது குறித்து கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் காய்கறித்துறைப் பேராசிரியர் முனைவர் சரஸ்வதி நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இங்கே...
“மாடித்தோட்டத்துக்கும், புறக்கடைத் தோட்டத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. தொட்டிச் செடிகளுக்குத் தேவையான வளமான மண்ணை வெளியில் இருந்து கூட எடுத்து வரலாம். ஆனால், புறக்கடைத் தோட்டத்துக்கு அப்படி இல்லை. நம் வீட்டு பகுதியில் உள்ள மண்ணில்தான் பாத்திகள் அமைச்சு செடிகள் வளர்க்க முடியும். அதனால், புறக்கடைத் தோட்டம் அமைக்கிறவங்க மண் மாதிரியை எடுத்து மண் பரிசோதனை செய்யணும். மண்ணின் கார, அமிலத்தன்மையைத் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்த பயிர்களைத் தேர்வு செய்து வளர்த்தா பிரச்னை இருக்காது. பாசனம் செய்யப் போற தண்ணீரையும் பரிசோதனை செய்து கொள்ளணும். மண் புரளும்படி நல்லா கொத்தி விட்டு, மண் கட்டிகளை உடைச்சு, பொலபொலப்பாக்கி மேட்டுப்பாத்தி அமைச்சுக்கணும். அடியுரமாக ஆட்டு எரு அல்லது தொழுவுரம் போடலாம். பஞ்சகவ்யா கரைசல்ல நாற்றுகளோட வேரை நனைச்சு நடவு செய்யணும்” என்றார்.
மகசூல் கூட்டும் மண்புழு உரம்!

விதைகள் அல்லது நாற்றுக்களை நடவு செய்த 15-ம் நாளில் மேலுரமாக ஆட்டு எருவைத் தூவி விட்டால், செடிகள் விரைவாக வளரும். 60-ம் நாளில் இருந்து 180 நாட்கள் வரை மகசூல் கொடுக்கும் காய்கறிச் செடிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், வேப்பம் பிண்ணாக்கு, ஆட்டு எரு என்று மாற்றி மாற்றி கொடுத்து வந்தால், செடிகளில் நிறைய காய்கள் பிடிக்கும்.
முட்டு கொடுப்பது அவசியம்!
கத்திரிச்செடி காய் பிடிக்கத் தொடங்கியதும் பாரம் தாங்காமல், கிளைகள் ஒடிந்து விழும் வாய்ப்பு உண்டு. இதைத் தவிர்க்க ஒரு சிறிய மூங்கில் குச்சி அல்லது ரீப்பர் துண்டை தொட்டி மண்ணில் நட்டு, வைத்து செடியுடன் சேர்த்துக்கட்டி முட்டு கொடுக்க வேண்டும். அதே போல், தக்காளிச் செடிகளிலும், காய்க்கும் பருவத்தில் முட்டுக்கொடுக்க வேண்டியது அவசியம்.(Thanks Vikatan)

Roof Farm-11

தமது குடும்பத்துக்குத் தேவையான விஷமில்லா காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் வீட்டுத்தோட்ட விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார்கள், நகரவாசிகள் பலரும். அந்த வகையில் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டு மாடியில் 1,500 சதுர அடியில் வீட்டுத்தோட்டம் அமைத்து நஞ்சில்லா காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார், லட்சுமி ஸ்ரீராம்.
மாலைப்பொழுது ஒன்றில், மலர்ந்து நிற்கும் மாடிச்செடிகளின் ஊடே வலம் வந்த லட்சுமி ஸ்ரீராமிடம் பேசினோம். ‘‘எங்க பூர்வீகம் கேரளா, பாலக்காடு. வேலை காரணமா சென்னையில் குடியேறி 24 ஆண்டுகள் ஆயிடுச்சு. எனக்குச் சின்ன வயசுல இருந்தே செடி, கொடி, மரங்கள் மேல ரொம்ப இஷ்டம். கேரளாவில் இருக்கும் ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் பலவிதமான பழ மரங்கள், பூச்செடிகள், பச்சைக்கறிகள் (காய்கறிகள்)னு பலவகை தாவரங்களும் செழித்து நிற்கும். மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த செடிகளைப் பிரிந்து சென்னையில் குடியேற வேண்டிய சூழல் ஏற்பட்டதுல கொஞ்சம் வருத்தம் இருந்துச்சு.
வீட்டுத்தோட்ட ஆர்வம் சென்னை வந்தும் என்னை விட்டப்பாடில்லை. சென்னையில் நாங்க வசிச்ச வீட்டை சுத்தி கொஞ்சம் இட வசதியும் இருந்தது. அதில், மாமரம், முருங்கை மற்றும் பூச்செடிகள், காய்கறிச் செடிகளும் வச்சேன். சரி, இதையே மாடியில வளர்த்தா என்னனு எனக்குள்ள தோணிச்சு. அப்போ மாடியில் மண்தொட்டிகள்ல குரோட்டன்ஸ், ரோஜானு அழகுச் செடிகள் வளர்த்தேன். அது நல்லா வளரவும், காய்கறிச் செடிகளை வளர்க்கலாம்னு இறங்கினேன். சுத்தமான செம்மண், கொஞ்சம் மணல், கொஞ்சம் ஆட்டு எரு கலந்து மண் தொட்டியில் நிரப்பி, கீரை விதைகளைத் தூவி வளர்த்ததுல 22 நாள்ல நல்லா வளர்ந்துச்சு. இதுதான் எங்க வீட்டுத்தோட்டத்தோட முதல் பயிர். தொடர்ந்து கத்திரி, தக்காளி, மிளகாய்னு வளர்க்கத் தொடங்கினேன். தொலைஞ்சுபோன வீட்டுத்தோட்ட மகிழ்ச்சி, இந்த மாடித்தோட்டம் மூலமா மறுபடியும் நிறைவேறினதோட, 24 ஆண்டுகளா தொடருது” என்று முன்கதை சொன்ன லட்சுமி ஸ்ரீராம், தொடர்ந்தார்.
19 வகை செடிகள்!
வெண்டை, கத்திரி, கொத்தவரை, பச்சை மிளகாய், கீரைகள், முருங்கை, கோவைக்காய், திராட்சை, காராமணி, அவரை, முள்ளங்கி, புடலை, பாகல், பீர்க்கன், கறிவேப்பிலை, வல்லாரை, காந்தாரி மிளகு... என்று மொத்தம் 19 வகை செடிகளை 150 பைகள்ல வளர்க்கிறேன். வாரத்துக்கு இரண்டு முறை காய்கறிகளைப்  பறிப்பேன். வெண்டைச் செடி 30 பைகள்ல இருக்கு. கத்திரிச் செடி 20 பைகள்ல இருக்கு. கீரைகளைத் தனித்தனியாக நிறைய பைகள்ல வெச்சிருக்கேன். 3 அடி உயரம் கொண்ட 6 முருங்கைச் செடிகளும் இருக்கு. இதோட காய்கள் மட்டும் 4 அடி வரை வளரும்.
சென்னையில் 12 மாதமும் கீரை வளரும்!

வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான எல்லா உபகரணங்களும் இப்ப கடைகள்ல கிடைக்குது. ஆட்டு எருவைக்கூட தேடினால் வாங்கிடலாம். வீட்டுத்தோட்டம் அமைக்கிறவங்களுக்கு ஆர்வமும், விடா முயற்சியும் முக்கியம். காலையில் அல்லது மாலையில் அரை மணி நேரம் ஒதுக்கினா போதுமானது. புதிதா வீட்டுத்தோட்டம் அமைக்கிறவங்க... ஆரம்பத்தில் மிளகாய், தக்காளி, வெண்டை, கீரைகள், கறிவேப்பிலை மாதிரியான பயிர்கள்ல ஆரம்பிக்கலாம். குறிப்பாக, சென்னைப் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலையில் எல்லா கீரை வகைகளும் 12 மாசமும் சிறப்பா வளரும்.
பைகளை வைக்கும்போது வெறும் தரையில் வைக்கக் கூடாது. அடுப்புக்கு கல் கூட்டுறது போல மூணு செங்கற்களை வெச்சு அதுமேல பைகளை வைக்கிறது நல்லது. செடிகளுக்கு தினம் ஒரு முறை பூவாளியில் பாசனம் செய்யணும். எக்காரணம் கொண்டும் தொட்டியில் வழிய வழிய தண்ணீர் ஊத்தக்கூடாது. அப்படி ஊத்தினா... மண்ணில் உள்ள சத்து வெளியேறிடும். அவ்வப்போது களைகளை களைய மூடாக்கையும் உபயோகப்படுத்துகிறேன். நோய்த் தாக்குதல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறை நீம் (வேம்பு) கலந்த பயோ மருந்தைத் தெளிக்கறது நல்லது. 15 நாட்களுக்கு ஒரு முறை ஊட்டமேற்றிய மண்புழு உரம், ஆட்டு எரு இரண்டையும் கலந்து எல்லா செடிகளுக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வரலாம்’’ என்ற லட்சுமி,
‘91-ம் வருஷம் சென்னையில் விரல் விட்டு எண்ணும் அளவுலதான் வீட்டுத்தோட்டங்கள் இருந்துச்சு. இப்போ நூற்றுக்கணக்குல மலர்ந்து கிடக்குது. பெரும்பாலும் இயற்கை வழியிலதான் எல்லா தோட்டங்களும் பராமரிக்கப்படுதுங்கிறது மகிழ்ச்சியான செய்தி.
நான்கு நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்தோட தேவைக்குக் குறைந்தபட்சம் 20 தொட்டிகள்ல காய்கறிகளை விதைச்சா போதுமானது. எங்க வீட்டுத்தோட்டத்துல விளையுற காய்கறிகள்ல தேவைக்குப் போக மீதியை நண்பர்களுக்குக் கொடுத்துடுவோம்.
வீட்டுத்தோட்டம் ஒரு பொழுதுபோக்கு மட்டுமில்ல, மனதுக்கான புத்துணர்வையும் கொடுக்குது. அதிகாலை நேரத்தில் ஒரு மணிநேரம் வீட்டுத்தோட்டத்தில் வலம் வர்றவங்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு வெகுவா குறையறதோட, ஆக்ஸிஜன் அதிக அளவு கிடைக்கிறதால சுவாச நோய் பிரச்னைகளும் வர்றதில்லை. இதுல ஏதாச்சும் சந்தேகம்னா... என்தோட்டத்துல இருக்கிற ரோஜா, மல்லி, அரளிப் பூக்கள்கிட்ட கேட்டுப் பாருங்கள்” என்று சொல்லி புன்னகையுடன் விடைகொடுத்தார்.

Thursday, March 2, 2017

Roof Farm-10

கோயம்புத்தூர் மாநகரின் பிரதான பகுதி, ராமநாதபுரம். அங்குள்ள தங்கள் வீட்டு மொட்டை மாடியில் 1,500 சதுரடி பரப்பளவில் பல்வேறுவிதமான காய்கறிகள், கீரைகள், பழச்செடிகள், மூலிகைகள், கொடிப்பயிர்கள், கிழங்கு வகைகள்... என வளர்த்து வருகிறார்கள், பாலசண்முகம்-பானுமதி தம்பதி. அவர்களது அனுபவங்களைக் கேளுங்கள்.
ஓர் இளமாலைப் பொழுதில் மாடித்தோட்டச் செடிகளுக்கு மண்புழு உரமிட்டுக் கொண்டிருந்த தம்பதியைச் சந்தித்தோம். முதலில் பேச்சை ஆரம்பித்தார் பானுமதி.
“எங்களுக்கு பூர்விகம் கோயம்புத்தூர்தாங்க. கிராமம், விவசாயம்னு எதுவுமே தெரியாத வியாபாரக் குடும்பம் எங்களோடது. வாழ்றது நகரமா இருந்தாலும், நாங்க குடியிருந்த வீடுகள் எல்லாம் கிராமத்து வீடுகள் போலத்தான் இருந்துச்சு. 20 வருஷத்துக்கு முன்னல்லாம் வீட்டுக்கு முன்னாடியும் பின்னாடியும் நிறைய காலி இடம் கிடக்கும். ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலயும் வேப்பமரம், கொன்றை மரம்னு நிழல் தர்ற மரங்கள் கண்டிப்பா இருக்கும். எல்லாரோட வீட்டுலயும் கிணறும் இருக்கும். அதனால வீட்டுத்தோட்டம் அமைக்கிறது எங்களுக்கு சுலபமாயிடுச்சு. வாழை, கறிவேப்பிலை, முருங்கை, மா, கொய்யா, எலுமிச்சை, ரோஜா, மல்லிகை, முல்லை, செம்பருத்தி, துளசி, திருநீர்பத்ரி, செண்டுமல்லினு புறக்கடையே சோலைவனமா இருக்கும். வீட்டுப்பெண்கள் பெரும்பாலான நேரத்தை இந்தப் புறக்கடைத் தோட்டத்திலதான் கழிப்பாங்க. பள்ளி விடுமுறை நாட்கள்ல சின்னஞ்சிறுசுகள் எல்லாம் வீட்டு மரங்கள்ல ஊஞ்சல் கட்டி  ஆடுவாங்க.

அப்போல்லாம் விறகு அடுப்புச் சமையல்தான். அதுல கிடைக்கிற அடுப்புச் சாம்பலை எடுத்து சாணத்தோடு கலந்து புறக்கடைத் தோட்டச் செடிகளுக்கு உரமா கொடுப்போம். நொச்சி, வேப்பிலை புகைபோட்டு செடிகளுக்கு மாலை வேளைகள்ல பிடிப்போம். அதனால பூச்சிகள் வராது. புறக்கடைகள்தான் பெண்களுக்கான உடற்பயிற்சிக்கூடம். மாவாட்டுறது, அரிசி குத்துவது, தண்ணீர் இறைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதுனு ‘பிஸி’யாகவே இருந்தாங்க. அதனால 20 வருஷத்துக்கு முந்தியெல்லாம் குண்டான பெண்களையே அதிகம் பார்க்க முடியாது. எங்க வீட்டுப் பெண்களும் அப்படித்தான் இருந்தாங்க’’ என்று சொல்லி பெருமூச்சுவிட்டுக் கொண்ட பானுமதி, தொடர்ந்தார்.
‘அவள் விகடன்’ காட்டிய பாதை!
‘‘ஆனா, நாகரீக வளர்ச்சியில் ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ தவிர்க்க முடியாததாகிடுச்சு. புறக்கடைத் தோட்டம், கிணறு, ஆட்டுக்கல், அம்மிக்கல், துவைக்கும் கல், செடி, கொடி, மரங்கள் எல்லாத்தையும் புது வீடு கட்டமைப்புக்காக தியாகம் செய்ய வேண்டிய சூழல். மாடி வீட்டுக்குக் குடி போகிறோம்னு மகிழ்ச்சியா இருந்தாலும், புறக்கடைத் தோட்டத்தை விட்டு பிரியுற சோகம் அதிகமா இருந்துச்சு.
புது வீடு, முன்வாசலும் புறக்கடையும் இல்லாத அடுக்கு மாடி வீடு. ஒரு துளசிச் செடி வைக்கக் கூட வாய்ப்பில்லையேனு மனம் வெதும்பினப்பதான், அதற்கான தீர்வு கிடைச்சது. ‘அவள் விகடன்’ பத்திரிகையின் தொடர் வாசகி நான். அதில் வீட்டுத்தோட்டம் குறித்த கட்டுரைகள், பயிற்சி குறித்து வெளியான தகவல்கள் மூலம் மாடித்தோட்டம் குறித்து தெரிஞ்சுக்கிட்டேன். உடனே மாடித்தோட்டம் அமைச்சு புறக்கடைத் தோட்ட இழப்பை நிறைவு செய்துகிட்டேன்.
இப்ப ரெண்டு வருஷமாச்சு...

தக்காளி, கத்திரி, வெண்டை, பாகல், புடல், பீர்க்கன், முருங்கை, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, வாழை, கறிவேப்பிலை, திராட்சை, மணத்தக்காளி, சிறுகீரை, அகத்தி, தண்டுக்கீரை, பசலை, வெந்தயக்கீரை, பிரண்டை, ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி, செம்பருத்தி, துளசினு 26 வகை தாவரங்களை 100 பைகள்ல வளர்க்கிறோம்” என்றார் முகம் நிறைய மலர்ச்சியுடன்.
நாட்டு ரகம் மட்டும்தான்!
தொடர்ந்த பாலசண்முகம், “என் மனைவிக்கு இருந்த ஆர்வம் எனக்கும் தொத்திகிச்சு. பெரும்பாலான ஓய்வு நேரம் இந்த மாடித்தோட்டத்தில்தான் கழியுது. இங்க விளையுற எல்லா காய்கறிகளும் முழுக்க நாட்டுரகங்கள்தான். வீரிய ரகங்கள்ல விளைச்சல் அதிகம் கிடைக்கும். ஆனா, எங்களுக்கு அதுல உடன்பாடில்லை. ஒரு முறை நாட்டுரகச் செடிகளைப் பயிர் பண்ணிட்டா, அந்தச் செடிகள்ல இருந்தே விதையும் கிடைச்சுடும். அதில்லாம நிறைய கண்காட்சிகள்லயும் இப்போ நாட்டு ரக விதைகள் கிடைக்குது.
கத்திரியை நேரடியா விதைக்காதீங்க.
கத்திரி, தக்காளி, மிளகாய் விதைகளை நேரடியாக பைக்குள் விதைக்கக்கூடாது. குழித்தட்டு அல்லது பைகள்ல நாற்றா வளர்த்துத்தான் நடணும். பீர்க்கன், புடல், பாகல், அவரை விதைகளை நேரடியாகவே விதைக்கலாம்.
செம்மண், தென்னைநார்க்கழிவு, மண்புழு உரம் இதுக மூணையும் சரி பங்காகக் கலந்து பைகள்ல நிரப்பித்தான் நடவு செய்யணும். ‘சொதசொத’னு தண்ணீர் விடாமல், லேசா பாசனம் பண்ணினாலே போதுமானது. செடிகள் வளருற பைகளை தரைக்கு மேல செங்கல் அல்லது சவுக்குக் கட்டைகளை கிடத்தி, அது மேல வைக்கலாம். அப்போதான் மேல்தரை பாதிக்காது.
இஞ்சி, மிளகாய், பூண்டு மூணையும் சரி சமமாக எடுத்து அரைச்சு கொஞ்சம்  காதிசோப் கரைசல் கலந்து வடிகட்டினா... அதுதான், பூச்சிவிரட்டிக் கரைசல். இதை 5 லிட்டர் தண்ணீர்ல கலந்து செடிகள் மீது புகைபோல தெளிச்சா பூச்சி, புழுக்கள் தாக்காது” என்றார்.
தாய்வீட்டுச் சீதனம்!
நிறைவாகப் பேசிய பானுமதி, “இங்க விளையுறதுல எங்க குடும்பத்தேவைக்குப் போக மீதமுள்ளதை உறவினர்களுக்குக் கொடுத்துடுவோம். திருமணம் முடிஞ்சு சென்னையில் இருக்குற எங்க மகளைப் பார்க்க அடிக்கடி போகும்போது, அவளுக்கு இந்த இயற்கைக் காய்கறிகளைத்தான் கொண்டு போறோம். ‘எத்தனையோ சீர்வரிசைகளை தாய் வீட்டில் இருந்து வாங்கினாலும், அது பெரிசில்லை. வாரம்தோறும் தாய் வீட்டில் இருந்து வரும் விஷமில்லா காய்கறிகள்தான் என்னைப் பொறுத்தவரை உயர்ந்த சீதனம்’னு எங்க மக அடிக்கடி சொல்லுவா. மாடித்தோட்டத்தோட சிறப்பைச் சொல்ல இது ஒண்ணே போதும்” என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார்.

(Thanks Vikatan) 

Roof Farm-9

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தின் மேற்கூரையில் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 750 செடி, கொடிப் பயிர்களுடன் பசுமைக் கட்டி நிற்கும் அலுவலக மாடித்தோட்டம் குறித்து கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம்.

அந்தத்தோட்டம் அமைய, காரணமாக இருந்தவர், கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநர் முருகன். அலுவலகக் கட்டடங்களில் தோட்டம் அமைப்பது குறித்து, முருகன் சொன்ன தகவல்கள் இங்கே...
‘‘நான் வேலூரில் வேலை பார்த்தபோது, திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக நடைபெற்றது. அதில் உற்பத்தி செய்யப்படும் உரங்களை விவசாயிகளுக்குக் கொடுத்தது போக, மீதமுள்ளவற்றை என்ன செய்யலாம் என்று யோசித்தோம். அப்போது உதித்ததுதான் வீட்டுத் தோட்டம் அமைக்கும் எண்ணம். அது மக்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. கோயம்புத்தூருக்கு மாறுதலாகி வந்தபிறகு, 2012-ம் ஆண்டு சூலூர் யூனியன் அலுவலகத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. அதன் மொட்டை மாடியில் இருந்த 8 ஆயிரம் சதுரடி இடத்தில் தோட்டம் அமைக்கும் எண்ணம் தோன்றவே... மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்து, சுமார் 50 ஆயிரம் ரூபாய் செலவில் இந்த மாடித்தோட்டத்தை, சேர்மன் ‘மாதப்பூர்’ பாலுவுடன் சேர்ந்து அமைத்தோம்.
வீட்டுத்தோட்ட வல்லுநர் ‘வேலூர்’ சீனிவாசனை வரவழைத்து மாடித்தோட்டம் அமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தோம்.
தொடர் பராமரிப்பு செய்வதற்காக சுய உதவிக்குழுப் பெண்களுக்கு இடுபொருட்கள், மூலிகைப் பூச்சிவிரட்டித் தயாரிப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளைக் கொடுத்தோம். நான் அடிப்படையில் எம்.எஸ்.சி அக்ரி பட்டதாரி. எனக்குள் இருக்கும் விவசாய ஆர்வமும் கூட இந்த மாடித்தோட்டம் அமைக்க ஒரு காரணம்’’ என்ற முருகன், அங்கிருந்த பெண்கள் பக்கம் திரும்பி, ‘‘மூணு அறுவடை முடிஞ்சதும், செடிகள் இருக்கிற இந்தக் கூடைகள்ல மண்ணை மாத்தணும். மண் 10 கிலோ, தொழுஎரு 10 கிலோ, தென்னை நார்க்கழிவு 10 கிலோ, மண்புழு உரம் 5 கிலோ, ஆட்டு எரு 5 கிலோ இதையெல்லாம் ஒண்ணா கலந்து நிரப்பணும். கூடவே, கொஞ்சம் உயிர் உரமான, அசோஸ்பைரில்லம் சேர்த்துக்கணும்” என ஆலோசனை சொன்னார்.
மீண்டும் நம்மிடம் பேசத் தொடங்கிய முருகன், “மூங்கில் கூடைகளில் செடிகளை வளர்க்கும் திட்டத்தை இங்கு செயல்படுத்தி வருகிறோம். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வரை கூடைகளைப் பயன்படுத்தலாம். வெயில், மழை அனைத்தையும் தாங்கி நிற்கும். யாரும் எளிதில் கையாளலாம். புதுக்கூடை வாங்கி வந்தவுடன், சாணம் கொண்டு முழுமையாக மெழுகி வெயிலில் காயவைத்த பிறகே மண் நிரப்பி பயன்படுத்துகிறோம். அப்போதுதான் கூடை முறிந்து போகாமல் இருக்கும்.
இனி, ஒன்றியம்தோறும் தோட்டம்!
இந்த ஆபீஸ் தோட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தகுந்த சூழல் உள்ள மற்ற உள்ளாட்சி அலுவலகங்களிலும் இது போன்ற தோட்டம் அமைக்க இருக்கிறோம். இன்னும் சில மாதங்களில் சூலூர் யூனியன் அலுவலக வளாகத்தில் காய்கறி அங்காடி ஒன்றையும் அமைக்க இருக்கிறோம். இங்கு விளையும் காய்கறிகள் போக, பக்கத்து ஊர்களில் விளையும் காய்கறிகளையும் வரவழைத்து சுய உதவிக்குழுப் பெண்கள் மூலம் விற்பனை செய்யும் எண்ணமும் இருக்கிறது. ஆனால், அது இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி விளைந்த காய்கறிகளாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
மாதம் 50 பெண்களுக்கு இயற்கை வழி மாடித்தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளது. அந்த பெண்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை அங்கன்வாடி மையங்களுக்குக் கொடுத்து எதிர்கால சந்ததியினருக்கும் விஷமில்லா உணவைக் கொடுக்க இருக்கிறோம்.
மாடித்தோட்டத்தில் ‘ஒருங்கிணைந்த மாடித்தோட்டம்’ என்ற புது முயற்சியையும் செயல்படுத்த இருக்கிறோம். வீட்டில் மாடித்தோட்டம் அமைப்பவர்கள் ஓரே இடத்தில் பலவித செடிகளை வளர்க்கிறார்கள். ஆனால், ஒருங்கிணைந்த மாடித்தோட்டத்தில்... ஒரு வீட்டு மாடியில் ஒரே ஒரு பயிர் என ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பயிரை வளர்ப்பார்கள். இப்படி சாகுபடி செய்யும் போது விளைச்சல் அதிகரித்து, நோய்த்தாக்குதல் குறைகிறது. இப்படி உற்பத்தி செய்பவர்கள் தங்களுக்குள் பண்டமாற்று முறையில் காய்கறிகளைப் பகிர்ந்து கொள்ளலாம், மீதமுள்ளதை விற்பனையும் செய்யலாம். வீட்டுத்தோட்டத்தில் நல்ல மகசூல் கிடைக்க தரமான விதைகளைத் தேர்ந்தெடுத்து நடவு செய்ய வேண்டும். பல காய்களின் விதையை நமது மாடித்தோட்ட செடிகளில் இருந்தே சேகரித்துக் கொள்ளலாம்.
சொக்க வைக்கும் சோலார்!

இந்த அலுவலகத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மாதிரி மாடித்தோட்டம் அமைந்திருப்பது போல, மாதிரி சோலார் மின்சாரமும் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 7 ஆயிரம் வாட்ஸ் திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைத்து அலுவலகப் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரத்தின் ஒரு பகுதியை உற்பத்திச் செய்கிறோம். இதன் மூலம் இந்த அலுவலகத்தின் மாதாந்திர மின்கட்டணம் வெகுவாகக் குறைந்துள்ளது’’ என்ற முருகன்,
‘‘மாடித்தோட்டம், சோலார் மின் உற்பத்தி, திடக்கழிவு மேலாண்மை போன்ற அரசின் பயனுள்ள திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் அதிகாரிகளும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும்தான். ஆர்வம் இன்மை காரணமாக சிலர் இந்தத் திட்டங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், அது யாருக்கும் பயனின்றி வீணாகிப்போகிறது. ஒரு கட்டத்தில் ‘திட்டமே தோல்வி’ என்கிற தோற்றம் உருவாகிவிடுகிறது. அதனால் திட்டம் நிறுத்தப்பட்டு மற்ற ஊர்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்பும் நழுவிப்போகிறது. எனவே, அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் வேலை செய்தால், எல்லா திட்டமும் வெற்றிதான்’’ என்கிற உண்மையை உரக்கச் சொன்னார்.

(Thanks Vikatan)

Roof Farm-8

வீடுகளில் மட்டுமல்லாமல் அலுவலகக் கட்டடங்களிலும் தோட்டம் அமைத்து சாதித்து வருகிறார்கள், கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள். அவர்களின் அனுபவத்தைப் பார்ப்போம், வாருங்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தின் மேற்கூரை முழுவதும் செடி, கொடிகள் என பசுமை போர்த்தி இருக்கிறது. 8 ஆயிரம் சதுரடி பரப்பளவில் உள்ள மேற்கூரையில் தோட்டம் அமைக்கப்பட்டு, தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதைப் பராமரிப்பது, சுய உதவிக்குழு பெண்கள்.
நாம் அந்த மாடித்தோட்டத்துக்குச் சென்றபோது... ‘‘அந்த கத்திரிச் செடிக்கு தண்ணீர் ஊத்தும்மா”, ‘‘தக்காளியில் புழு இருக்கும் போல, பூச்சிவிரட்டி அடிங்க” என சுயஉதவிக்குழு பெண்களுக்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருந்த சூலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ‘மாதப்பூர்’ பாலு என்கிற பாலசுந்தரம், மலர்ந்த முகத்துடன் நம்மை வரவேற்றுப் பேசத் தொடங்கினார்.

“இந்தத் தோட்டம் அமைச்சு ரெண்டு வருஷமாச்சு. முழுக்க முழுக்க இயற்கை முறையிலதான் காய்கறிகளை உற்பத்தி செய்றோம். ஆரம்பத்துல இருந்தே சுயஉதவிக்குழு பெண்கள்தான் பராமரிக்கிறாங்க. எல்லா விவரத்தையும் இந்தப் பெண்களே சொல்லுவாங்க” என்று சொல்லிக் கிளம்பினார்.
சரோஜா, கருப்பாத்தாள், பேபி என தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்களில் முதலில் பேசத் தொடங்கினார் சரோஜா.
மூங்கில் கூடையில் செடிகள்!
“மண் கலவை போடுறது, நடவு செய்றது, உரம் போடுறது, பூச்சிவிரட்டி அடிக்கிறதுனு எல்லா விஷயங்களிலும் மாவட்ட நிர்வாகம் எங்களுக்குப் பயிற்சி கொடுத்திருக்கு. வழக்கமா வீட்டுத்தோட்டத்துல செடி வளர்க்க பிளாஸ்டிக் பாக்கெட், பை, மண்தொட்டிகளைத்தான் பயன்படுத்துவாங்க. நாங்க முழுக்க மூங்கில் கூடைகளைத்தான் பயன்படுத்துறோம். அதனால, செடிகளுக்குக் காற்றோட்டம் நல்ல முறையில கிடைக்குது. மண் நிரப்பிய மூங்கில் கூடைகளை வெறும் தரையில் வைக்காம, ரெண்டு சவுக்குக்குச்சிகளை ஏணி மாதிரி கட்டி அது மேலதான் வெப்போம். அதனால தண்ணீர் கசிஞ்சிடுறதோட, கூடையோட அடிப்பகுதி சேதமாகாது.
கீரை, காய்கறி, மூலிகை!
மொத்தம் 750 கூடைகள்ல... சிறுகீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணினு அதிகமா விற்பனையாகுற 10 வகையான கீரைகள்; கத்திரி, மிளகாய், அவரைனு 10 வகையான காய்கறிகள்; தூதுவளை, முடக்கத்தான், கீழாநெல்லினு 10 வகையான மூலிகைகள்னு வளர்க்கிறோம். அதுபோக கம்பு, சோளம், கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்களும் இருக்கு. நெடும்பந்தல் அமைச்சு, பாகல், பீர்க்கன், சுரைக்காய்னு கொடிப் பயிர்களையும் வளர்க்குறோம்” என்ற சரோஜாவைத் தொடர்ந்தார், பேபி.
“ஒவ்வொரு கூடையிலும் 15 கிலோ மண், 5 கிலோ சாணம், 5 கிலோ ஆட்டு எரு, 5 கிலோ இலைதழை, 5 கிலோ தென்னை நார்க்கழிவு, 5 கிலோ மண்புழு உரம்னு கலந்து நிரப்பித்தான் விதையை நடவு செய்வோம். நடவுக்குப் பிறகு, மாதம் ரெண்டு தடவை பஞ்சகவ்யா தெளிப்போம். கீரைகள் 22 நாள்ல அறுவடைக்கு வந்துடும். இதுக்கு விற்பனை வாய்ப்பு அதிகமா இருக்கிறதால, 300 கூடைகள்ல கீரை வளக்கிறோம்” என்றார்.
நிறைவாகப் பேசிய கருப்பாத்தாள், “கீரை விதைகளைத் தூவிட்டு தினமும் லேசான ஈரப்பதம் இருக்குற அளவுக்கு தண்ணி தெளிக்கணும். முளைச்சு 10-ம் நாள்ல களை எடுத்து பஞ்சகவ்யா தெளிக்கணும். அவ்வளவுதான் கீரை விவசாயம்.
22-ம் நாள் ‘ஜம்’னு கீரை வளர்ந்து நிற்கும். அறுவடை பண்ணி, கட்டு கட்டி ‘ஆபீஸ் கீரை வாங்கலியோ... ஆபீஸ் கீரை’னு தெருவுல கூவினா போதும். பத்து நிமிஷத்துல கீரைக்கட்டு அம்புட்டும் காலியாகிடும். கீரை மட்டும் இல்லை. அப்பப்போ அறுவடையாகுற காய்களையும் இப்படித்தான் விற்பனை செய்றோம்” என்றார்.
  
மூங்கில் கூடை!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் மூங்கில் கூடை உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. 75 ரூபாய் முதல் கிடைக்கும் இந்தக் கூடைகளில்தான் செடிகளை வளர்க்கிறார்கள். இவற்றில் செடிகளின் வேர் வளர்ச்சி நன்றாக இருப்பதால், மாடித் தோட்டத்துக்கு ஏற்றவையாக உள்ளன.
மூங்கில் கூடைகள் பாலித்தீன் பைகளைவிட அதிக ஆயுள் கொண்டவை என்பதால், வீட்டுத்தோட்டம் அமைப்பவர்கள் மூங்கில் கூடைகளில் கவனம் வைக்கலாம். இது, மூங்கில் கூடை முடைபவர்களுக்கும் உதவியாக இருக்கும்.
விளையும் இடத்திலேயே விற்பனை!
யூனியன் அலுவலகத்தில் விளையும் காய்கறிகளை, அங்கே வேலை செய்பவர்கள், அலுவல் நிமித்தமாக அலுவலகம் வந்து செல்பவர்கள் என அனைவரும் வாங்குவதால், விற்பனை சுலபமாக முடிந்து விடுகிறது. கீரைகளை மட்டும் தெருக்களில் கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். இதில் வரும் வருமானத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான சம்பளம் போக, லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மகளிர் சுயஉதவிக்குழுவின் பெயரில் வங்கிகளில் வரவு வைக்கப்படுகின்றது.
பயன்படும் மூலிகைகள்!
சமீபகாலமாக மூலிகைகள் மீதான விழிப்பு உணர்வு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தங்களுக்குத் தேவைப்படும் மூலிகைகளைத் தேடி அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இந்தத் தோட்டத்துக்கு வருகிறார்கள். குழந்தைகளின் சளி பிரச்னைக்கு துளசி; மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி என இங்குள்ள மூலிகைகளை இப்பகுதியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இயற்கை முறையில் பூச்சிக் கட்டுப்பாடு!
இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக சில கூடைகளில் சிறுதானியங்களை (குறிப்பாக கம்பு) நடவு செய்திருக்கிறார்கள். சிறுதானியங்களைத் தின்பதற்காக வரும் பறவைகள், மற்ற செடிகளில் உள்ள புழுக்களையும் கொத்தித் தின்று விடுகின்றன.

(Thanks Vikatan)

Wednesday, March 1, 2017

Roof Farm-7

உரித்தோட்டம், கைப்பிடிச் சுவர்த்தோட்டம் மற்றும் சுவர்த்தோட்டம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட வல்லுநர் பா.வின்சென்ட்.

“தரைப்பகுதியில் குறைந்த இடத்தில் அதிகத் தொட்டிகளை வைக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது, உரித்தோட்டம். மாடியில் 5 முதல் 7 அடி உயரத்தில் உறுதியான கம்பிகளை ஒரு பக்க சுவரிலிருந்து மறுபக்க சுவர் வரை நீளவாக்கில் பொருத்த வேண்டும். தகுந்த இடைவெளியில் ஒரு கம்பி முதல் ஐந்து கம்பிகள் வரை கூட இதில் இருக்கலாம்.
இன்னும் எளிமையாகச் செய்ய நினைப்பவர்கள் துணிகள் காயப்போடும் கயிறுகளை நீளவாக்கில் கட்டுவது போல அமைத்துக் கொள்ளலாம். இதற்கு லாரி பாரம் கட்டும் தடிமனான நைலான் கயிறுகளைப் பயன்படுத்துவது நல்லது. அதில், கைக்கு எட்டும் உயரத்தில் தொட்டிகளைத் தொங்கவிட வேண்டும்.
தூக்குக் கம்பி பொருத்தப் பட்ட பிளாஸ்டிக் வாளிகள், உரிக்கென விற்கப்படும் பிரத்யேக பாத்திரங்கள், பயன்படுத்திய கிரீஸ், ஆயில் டப்பாக்கள் ஆகியவற்றில் செடிகளை வளர்க்கலாம். வளர்க்கும் பாத்திரத்தின் உயரத்தில் கால்பங்கு செறிவூட்டம் செய்யப்பட்ட தென்னை நார்க்கழிவு மற்றும் மண்புழு உரம், அசோஸ்பைரில்லம் ஆகிய மூன்றையும் கலந்து கொட்டி வைக்க வேண்டும். இக்கலவை இருக்கும் பகுதிக்கு மேல் பகுதியில் பாத்திரத்தைச் சுற்றிலும் பெருவிரல் புகும் அளவில் 5 துவாரங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். பிறகு, விருப்பப்பட்ட விதைகளை ஐந்து எண்ணிக்கையில் விதைக்க வேண்டும். ஐந்து துவாரங்கள் வழியே ஐந்து செடிகள் வெளிவந்து கிளை பரப்பி மகசூல் கொடுக்கும்.
உரித்தோட்டத்துக்கு உகந்த செடிகள்!
தக்காளி, அவரை, புதினா, பாலக்கீரை ஆகிய சிறு இலை தாவரங்களை மட்டுமே உரித்தோட்டத்தில் வளர்க்க முடியும். கொக்கியில் தொங்கும் வாளியின் பக்கத் துவாரங்கள் வழியே செடிகளின் கிளைகள் முழுமையாக வெளிவந்து, கீழ்நோக்கி காய்பிடித்து பழமாகும். இடையில் வழக்கம்போல் பூவாளிப் பாசனம் செய்யவேண்டும். மற்ற தரைத் தொட்டிகளுக்குச் செய்வது போலவே இதற்கும் பராமரிப்பு செய்தால் போதும். செடிகள் வழக்கமாக புவிஈர்ப்பு விசையினை எதிர்த்து, மேல் நோக்கி வளரும். ஆனால், உரித்தோட்டச் செடிகள் கீழ்நோக்கி வளர்வதால் வேர் வழியே உறிஞ்சப்படும் முழுமையான சத்து செடிகளுக்குக் கிடைக்கும். இதனால், காய்களின் எண்ணிக்கை மற்ற செடிகளைவிட அதிகம் இருக்கும். கீரைகளும் இதைப்போலவே தரமான மகசூலைக் கொடுக்கும்.
கை கொடுக்கும் கைப்பிடிச் சுவர்தோட்டம்!
மொட்டை மாடியைச் சுற்றிலும் பாதுகாப்புக்காக கைப்பிடிச் சுவர் கட்டுவோம். சுமார் 2 முதல் 3 அடி அகலம் கொண்ட அந்த கைப்பிடிச் சுவரில் கூட பசுமைப் போர்வை விவசாயம் செய்ய முடியும். இதற்கு 3 அடி உயரம், அரை அடி அகலம், 10 அடி நீளத்தில் செறிவூட்டம் செய்யப்பட்ட மண் கலவை நிரப்பிய பாலித்தீன் பைகள் கிடைக்கின்றன. அவற்றில் ஓட்டை போட்டு கீரை விதையை ஊன்றலாம். அரையடி இடைவெளியில் விதைக்கும்போது, 10 அடி நீள பையில் 20 செடிகளை வளர்க்கலாம்.

கைப்பிடிச் சுவரில் உள்ள நீளமான பை கீழே விழாமலிருக்க ஸ்டேண்ட் அமைத்துக் கொள்வது நல்லது. மாடியில் நான்கு புற  கைப்பிடிச் சுவரிலும் இப்படி அமைக்கலாம். இந்தப்பைகளில் விரைவான வளர்ச்சி, தண்ணீர் ஆவியாதல் குறைவு என்பதால் எப்போதும் நிரந்தர ஈரப்பதம், வேர் சம்பந்தமான நோய்த் தாக்குதல் அறவே இருக்காது. களைகள் வராது.
இதில் சிறிய வேர்களைக் கொண்ட கீரை, கொத்தமல்லித்தழை போன்ற செடிகளை மட்டுமே வளர்க்க முடியும். மேலும், பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக வெட்டப்பட்ட வாழை மரத்தின் தண்டில் அரை அடிக்கு ஒரு துவாரம் போட்டு, அதில் மண் கலவை நிரப்பி குறுகிய நாட்களில் மகசூலுக்கு வரும் கீரைகளை வளர்க்கலாம். வாழைத் தண்டிலிருக்கும் ஈரப்பதமே செடியின் வளர்ச்சிக்குப் போதுமானது. இதில் ஒரு மகசூல் மட்டுமே எடுக்க முடியும். வாழை மரத் தண்டு காய்ந்து விடுவதால் அடுத்த நடவு செய்ய முடியாது.
சுலபமான சுவர்தோட்டம்!
தற்போது பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் பிரபலமாகி வருகிறது, சுவர்தோட்டம். வீட்டுவெளிச் சுவரில் கைக்கெட்டும் அல்லது ஏணி வைத்து ஏறும் அளவில் தகுந்த இடைவெளியில் ஜாடிகள், வாய் அகன்ற பாத்திரங்கள், பிளாஸ்டிக் வாளிகள் போன்றவற்றைப் பொருத்தி செடிகள் வளர்க்கலாம். சுவரில் ஆணிகள் அடிப்பதைத் தவிர்க்கவும், செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் சுவரின் மீது கசியாமல் இருக்கவும் சுவரின் அளவுக்கு ஹார்ட்போர்டு  அல்லது மரப்பலகையை நிறுத்தி வைத்து அதில் அங்கங்கே பலகை தாங்கிகள் பொருத்தி தொட்டிகளை வைக்கலாம். இவற்றுக்கு சிறிய குவளை மூலம் நீரை ஊற்றுவது நல்லது. தற்போது, இந்த வகை சுவர்த் தோட்டத்தில் அழகுத் தாவரங்கள் மட்டுமே அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் ஏற்படும் இடப்பற்றாக்குறை சுவர்த் தோட்ட காய்கறி சாகுபடியை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
டைமர் பாசனம்!
கணவன், மனைவி இருவருமே வேலைக்குப் போய் வருபவர்களாக இருக்கும் பட்சத்தில் வீட்டுத்தோட்டச் செடிகளுக்கு சரியான நேரத்தில் தண்ணீர் பாசனம் செய்யமுடியாது. அதற்கான நேரமும் அவர்களிடம் இருக்காது. அதற்கான மாற்றுத் தொழில்நுட்பம்தான் ‘டைமர்’ பாசனம். மாடியின் ஒரு மூலையில் குறைந்தபட்சம் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் டேங்க் ஒன்றை தகுந்த உயரத்தில் வைத்து விடவேண்டும். அதிலிருந்து பிரதான குழாய் ஒன்றை எடுத்துச் சென்று அதில் இருபுறமும் துவாரம்போட்டு பயிருக்குத் தகுந்தாற்போல் மைக்ரோ குழாய்களை இணைத்து தனித்தனியாக தொட்டிகளில் விட வேண்டும். பிளாஸ்டிக் தொட்டியில் பொருத்தப்பட்டுள்ள டைமரில் நேரத்தை செட் செய்து விட்டால், போதும், செடிகளுக்குத் தேவையான அளவில் நீர் பாய்ந்து விடும். இது பேட்டரியில் இயங்கக் கூடியது. இது போக சற்று அதிக செலவு செய்ய முடிந்தவர்கள் செல்போன் மூலம் இயங்கும் மோட்டார் ஸ்டார்ட்டரைப் பொருத்திக் கொள்ளலாம். இதை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும்” என்று ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் தெளிவாக விவரித்த வின்சென்ட், நிறைவாக
“வீட்டுத்தோட்டம் அமைக்கத் தேவையான விதைகள் நாட்டு ரகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். புதியதாக தோட்டம் அமைப்பவர்கள் ஏற்கெனவே வீட்டுத்தோட்டம் வைத்துள்ளவர்களைத் தேடிப் போய் தரமான விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அருகில் உள்ள வேளாண்மைத் தோட்டக்கலை அலுவலகத்தில் விசாரித்தால், முன்னோடி விவசாயிகளின் முகவரிகள் கிடைக்கும். அவர்களிடமும் நாட்டு ரக விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதோடு, பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி போன்றவற்றைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களையும் வாங்கி வரலாம்.
தேடல் உள்ளவர்கள், வீட்டுத்தோட்டத்தில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஜெயிக்கலாம்” என்றார்.

தோட்டக்கலைச் சிகிச்சை!
வீட்டுத்தோட்ட விவரங்களைக் கூறிய வின்சென்ட், “இன்றைய அதிவேக வாழ்க்கை முறையில் வேலைப்பளு, தூக்கமின்மை, நெரிசல் மிக்க பயணம், கடுமையான அலுவலக உழைப்பு, அதனால் ஏற்படும் மன உளைச்சல், உடல் சோர்வு போன்ற இன்னல்களால் சராசரி மனிதனின் இயல்பு வாழ்க்கை தொலைந்து போகிறது. மன அழுத்தம் காரணமாக தேவையில்லாத கோபம், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களையும் வெளிப்படுத்துகிறான். அதற்கு எளிய மற்றும் சிறப்பான தீர்வு தருகிறது, தோட்டக்கலைச் சிகிச்சை.
அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனத்தில் கையெழுத்திட்டவரும், அந்நாட்டின் மனநல மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவருமான டாக்டர்.பெஞ்சமின் ரஷ் என்பவர்...
1798-ம் ஆண்டு ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டார். மனநலம் குன்றியவர்களுக்கு தோட்டக்கலை மூலம் சிகிச்சை தருவதால், அவர்களின் மனநிலையை மேம்படுத்தலாம் என்பதுதான் அந்த மருத்துவ கண்டுபிடிப்பு.
இன்று வளர்ந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாக தோட்டக்கலைச் சிகிச்சை உருவெடுத்துள்ளது. நாள்தோறும் தோட்டங்களில் வலம் வருபவர்களுக்கு மன ஒருமைப்பாடு, புத்துணர்வு, தெளிவு ஆகியவை கிடைக்கின்றன.
வயதானவர்களுக்கு உடல் ரீதியான வலிமை, சுறுசுறுப்பு, தெளிவான கண்பார்வை ஆகிய முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு பார்த்தல், தொடுதல், நுகர்தல், சுவைத்தல் மூலம் வீட்டுத்தோட்டங்கள் அவர்களுக்கு இயற்கை குறித்த புரிதலை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மேலும், கவனம், புதிய தொழில்நுட்பத்தை மனம் நாடுதல், பிரச்னைகளுக்கு தீர்வு, நினைவாற்றல், கூட்டுக்குடும்பத்தில் சுமூக உறவு ஆகியவற்றை மனிதர்களுக்குக் கொடுக்கும் அற்புதவனம்தான், வீட்டுதோட்டம்.
இது நஞ்சில்லாக் காய்கறிகளை நமக்குக் கொடுப்பதுடன் சமூகத்தில் ஒரு மதிப்பையும் தேடிக்கொடுக்கிறது. எனவே, வீட்டுக்கு வீடு தோட்டம் அமைப்போம்... வேதனை இல்லா உலகம் சமைப்போம்” என்று அற்புதமான தகவலையும் பகிர்ந்தார்.

(Thanks Vikatan)