Tuesday, February 28, 2017

Roof Farm-3


“செடிப்பயிர், கொடிப்பயிர், கிழங்குப்பயிர் என மூன்றுவகை பயிர்களையும் மாடித்தோட்டத்தில் சாகுபடி செய்யலாம். கத்திரி, மிளகாய், தக்காளி, கறிவேப்பிலை, காலிஃபிளவர் உள்ளிட்ட காய்கறிச் செடிகளை நாற்றங்கால் முறையில்தான் நடவு செய்ய வேண்டும். இதற்குத் தனியாக நாற்றங்கால் தொட்டிகளை அமைக்க வேண்டும். கீரை, அவரை, கொத்தமல்லித்தழை, பீன்ஸ் போன்ற செடிகளையும்; பாகல், புடலை, பீர்க்கன், சுரைக்காய் உள்ளிட்ட கொடிவகைப் பயிர்களையும்; பீட்ரூட், முள்ளங்கி, கேரட் போன்ற மண்ணுக்குக் கீழ் வளரும் காய்கறிகளையும் நேரடி விதைப்பு மூலம் விளைவிக்கலாம். நாற்றங்கால் விடத் தேவையான பக்கெட்டில், செறிவூட்டிய மண்ணை இட்டு நிரப்பி, விதைநேர்த்தி செய்யப்பட்ட காய்கறி விதைகளைப் பரவலாகத் தூவி தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தக்காளி!
நாற்றங்காலில் தக்காளி விதைகளை விதைத்த, 10-ம் நாளில் ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். நாற்று நன்றாக வளர இது அவசியம். விதைத்த 25 நாட்களில் தக்காளி நாற்றை எடுத்து நட வேண்டும். தக்காளி செடிக்கு 3 அடி உயரம் கொண்ட தொட்டி அல்லது மரப்பெட்டிகளைப் பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். ஊட்டமேற்றிய மண்ணாக இருந்தால், இரண்டு நாற்றுகளும், நீளம் அதிகமான பெட்டியாக இருப்பின், அதற்கு தகுந்தாற்போல் அதிக நாற்றுகளையும் நடலாம். தகுந்த இடைவெளி அவசியம். நடவு செய்த 60-ம் நாளில் இருந்து தக்காளியை அறுவடை செய்யலாம். தொடர்ந்து 60 நாட்களுக்கு மகசூல் கொடுக்கும். இடையில் மண்புழு உரத்தை 500 கிராம் அளவில் மேலுரமாகக் கொடுக்கலாம். பூச்சித்தாக்குதல் இருந்தால், பூக்கும் பருவத்தில் மட்டும் 5 மில்லி வேப்பெண்ணெயை 100 மில்லி காதி சோப் கரைசலில் கலந்து புகைபோல் தெளிக்க வேண்டும். அப்படிச் செய்தால், சாறு உறிஞ்சும் பூச்சிகள், அசுவிணிப்பூச்சிகள் தீண்டாது. காய்ப் பருவத்தில் ஒரு முறை இதே கரைசலைத் தெளித்தால் காய்ப்புழு வராது.

ஆண்டு முழுவதும் அறுவடை!
தக்காளியில் காய் பிடிக்கும் தருணத்தில் எடை தாங்காமல் தண்டு ஒடிந்து விடும் வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க தொட்டியில் தாங்குக் குச்சிகளை நட்டு, செடியோடு இணைத்துக் கட்டவேண்டும். நன்றாகப் பராமரித்தால் ஒரு செடியிலிருந்து 3 கிலோ வரை மகசூல் பெறலாம். தினந்தோறும் தக்காளி தேவை என்றால், நாற்றங்கால், காய்ப்பு, அறுவடை என்கிற மூன்று பருவங்களும் ஒரே சமயத்தில் இருக்கும்படி வடிவமைத்துக்கொண்டால் ஆண்டு முழுவதும் கிடைக்கும். இதற்குத் தொட்டிகளை அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.
கத்திரி!
கத்திரியின் வேர்கள் ஆழமாகச் செல்லக்கூடியவை. அதனால், 4 அடி உயரம் உள்ள சின்டெக்ஸ் பீப்பாய்களைப் பயன்படுத்துவது நல்லது. 40 நாட்கள் வயது கொண்ட கத்திரி நாற்றுகளைத் தொட்டியில் நடவுசெய்து, பாசன நீருடன் பஞ்சகவ்யா கலந்து கொடுக்கவேண்டும். செடி, படர்ந்து கிளைபரப்பும் தன்மையும் கொண்டது என்பதால், தொட்டியில் இரண்டு நாற்றுகளை நடவு செய்து 25-ம் நாளில் நன்றாக இருக்கும் நாற்றை விட்டு மற்றொரு நாற்றைப் பிடுங்கி அப்புறப்படுத்தி விடலாம். நடவு செய்த 100-ம் நாளில் இருந்து கத்திரி அறுவடைக்கு வந்து விடும். மாதம் இருமுறை மேலுரம் கொடுத்து வந்தால், 250 நாட்கள் வரையிலும் கூட மகசூல் கொடுக்கும். மேலுரமாக 500 கிராம் மண்புழு உரம் ஒரு முறை கொடுக்க வேண்டும். தேவைப்படும்போது, ஆட்டு எரு அல்லது தொழுவுரத்தை அரைகிலோ அளவுக்குக் கொடுத்து வரலாம்.
காய்க்கும் பருவத்தில் காய்ப்புழுத் தாக்குதல் காணப்படும். இஞ்சி, பூண்டு, புகையிலை ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கசக்கி ஒன்றாகக் கலந்து அரை லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலக்க வேண்டும். மாட்டுச் சிறுநீர் இல்லையென்றால், 250 மில்லி மோரில் கலந்து கொள்ளலாம். அதோடு, 200 மில்லி காதி சோப் கரைசல் சேர்த்து இரண்டு நாட்கள் ஊறவைத்து வடிகட்டி... செடி முழுவதும் நன்றாக நனையும்படி புகைபோல் தெளிக்க வேண்டும். பூக்கும் பருவத்தில் ஒருமுறையும், காய்க்கும் பருவத்தில் நான்கு முறைகளும் இந்தக் கரைசலைத் தெளித்தால் காய்ப்புழுத் தாக்குதல் இருக்காது. தரமான காய்களைப் பறிக்கலாம். நன்றாகப் பராமரித்தால் ஒரு செடியில் இருந்து, குறைந்தபட்சம் 6 கிலோ காய்களை அறுவடை செய்யலாம்.
மிளகாய்!
 40 நாட்கள் முதல் 50 நாட்கள் வயது கொண்ட மிளகாய் நாற்றுகளை நடவு செய்யலாம். இதை 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாளிகளில் நடவு செய்யலாம். மூன்று மாதங்களில் காய்ப்புக்கு வரும். தொடர்ந்து
10 மாதங்கள் வரை நல்ல மகசூல் கொடுக்கும்.
கொடிப் பயிர்கள்!
மாடியில், நைலான் கயிறுகளைக் குறுக்கு நெடுக்காகக் கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பாகல், பீர்க்கன், புடலை, சுரை போன்ற கொடிப்பயிர்களை தலா 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட பக்கெட்டில் மண் கலவை நிரப்பி பயிர் செய்யலாம். 35-ம் நாளில் கொடியை எடுத்து, சிறிய பந்தல் போன்று அமைக்கப்பட்ட கயிற்றில் படரவிட்டால், 120-ம் நாள் முதல் காய்கள் தொங்கும். ரகத்துக்கு ஒரு கொடி வீதம் படர விட்டாலே போதுமானது. இதற்கும் உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை அனைத்தும் முந்தையப் பயிர்களுக்குச் சொன்னது போலவே மேற்கொள்ளலாம்.
முள்ளங்கி, பீட்ரூட், கேரட், வெங்காயம் உள்ளிட்ட மண்ணுக்கும் அடியில் வளரும் பயிர்களை மண்பானை, பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் தேவையான மண் கலவையை நிரப்பி தகுந்த இடைவெளியில் நடவு செய்யலாம். வீட்டுத்தோட்டத்தைப் பொறுத்தவரை... அனைத்துப் பயிர்களுக்குமே நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை அனைத்தும் ஒரேமாதிரிதான். மாடித்தோட்டத்தின் மையப்பகுதியில் சோப்புக் கரைசலுடன், விளக்கு எண்ணெய் கலந்த விளக்குப்பொறி அமைத்து இரவு நேரத்தில் எரிய விட்டால்... வெளியில் இருந்து வரும் பூச்சிகளை அழிக்கலாம்’’ என்று வரிசையாக விவரித்த சரஸ்வதி, நிறைவாக,
“வீட்டுத்தோட்டம் மூலம், நம் குடும்பத்துக்குத் தேவையான நஞ்சில்லா காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். எல்லா சீசனிலும் எல்லா காய்கறிகளையும் பெற்றுக் கொள்ளலாம். நல்ல உடற்பயிற்சியும் கிடைக்கும். மனம் புத்துணர்வு பெறும். காற்று மாசு வீட்டுக்குள் வராது. வீட்டுக்குள் குளுமை நிலவும். இப்படியான பல நன்மைகளைக் கொண்ட வீட்டுத்தோட்டம், ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார் அக்கறை பொங்க.

மாடியில் மண்புழு உரம்! 
பயிர் இலைக்கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகளை சிறிய பிளாஸ்டிக் பேரலில் போட்டு அதில் பாதி அளவு பசுஞ்சாணம் போட்டு நிரப்பி... அது நன்கு மட்கிய பிறகு, மண்புழுக்களை விட்டு நிழலான பகுதியில் வைக்க வேண்டும். தினந்தோறும் தண்ணீர் தெளித்து வந்தால், மூன்று மாதங்களில் காபித்தூள் நிறத்தில் மண்புழு உரம் கிடைக்கும். அதை, செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். இது, தழைச்சத்து கொண்ட நல்ல உரம். தொடர்ந்து மட்கும் கழிவுளை, பேரலில் கொட்டி வந்தால் வீட்டுத்தோட்டத்துக்குத் தேவையான மண்புழு உரத்தை ஆண்டு முழுவதும் நாமே தயாரித்துக் கொள்ள முடியும்.

(Thanks Vikatan)

No comments:

Post a Comment